முடிவுக்கு வருகிறதா போர்..? தாக்குதலின் தீவிரத்தை குறைத்த ரஷ்யா.!!
முடிவுக்கு வருகிறதா போர்..? தாக்குதலின் தீவிரத்தை குறைத்த ரஷ்யா.!!
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 5வது நாளாக தாக்குதலை நடத்தி வருகிறது. உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கீவில் ரஷ்யா- உக்ரைன் படைகள் இடையே கடுமையான மோதல் நடைபெற்றது.
முன்னதாக இரு தரப்பிற்கும் இடையே நடந்துவரும் மோதலில் 4,300 ரஷ்ய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அரசு நேற்று தெரிவித்திருந்தது. உக்ரைன் தெரிவித்த இந்தப் பலி எண்ணிக்கை குறித்து ரஷ்யா எந்த மறுப்பும் தெரிவிக்காமல் இருந்து வந்தநிலையில் உக்ரைன் மீது நடத்தி வரும் தாக்குதலில் தங்கள் தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டது உண்மைதான் என ரஷ்யா முதன்முறையாக ஒப்புக்கொண்டது.
இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திபில் பேசிய ரஷ்ய பாதுகாப்புத்துறை செய்தித்தொடர்பாளர் இகோர் கொனஷெங்கோவ் கூறியதாவது, “எங்கள் தரப்பில் உயிரிழப்புகள் ஏற்பட்டதுடன், பலரும் காயமடைந்துள்ளனர். எனினும் உக்ரைன் தரப்பை விட தங்கள் தரப்பில் பாதிப்புகள் பல மடங்கு குறைவுதான்” என்று அவர் தெரிவித்தார்.
அதே நேரத்தில் பலியான ராணுவ வீரர்களின் எண்ணிக்கை குறித்து ரஷ்யா எந்தத் தகவலும் தெரிவிக்கவில்லை.
தற்பொது 5வது நாளாக போர் தீவிரமடைந்து வரும் நிலையில், இதுவரை 14 குழந்தைகள் உட்பட, 352 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன், 116 குழந்தைகள் உட்பட 1,684 பேர் காயமடைந்துள்ளதாகவும் உக்ரைன் உள்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. ஆனால் உக்ரைனின் ஆயுதப்படையினரின் உயிரிழப்புகள் குறித்து எந்த தகவலையும் உக்ரைன் உள்துறை அமைச்சகம் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் நடத்தும் தாக்குதலின் தீவிரம் குறைந்துள்ளதாக உக்ரைன் ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. இதன்படி உக்ரைனின் கார்கிவ் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தாக்குதலுக்கான எச்சரிக்கை ஒலி நிறுத்தப்பட்டுள்ளது. பெலாரசில் ரஷ்யா-உக்ரைன் இடையே பேச்சுவார்த்தை இன்று தொடங்கும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நடைபெற்றுவரும் போரில் இதுவரை ரஷ்ய ராணுவத்தினர் 5,300 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 29 போர் விமானங்கள், 29 ஹெலிகாப்டர்கள், 191 பீரங்கிகள் மற்றும் 816 கவச வாகனங்கள் வீழ்த்தப்பட்டுள்ளன என்றும் உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.