அதிகரிக்கிறதா அரசு ஊழியர்களின் பணி நேரம்..?: மத்திய அமைச்சர் விளக்கம்..!
அதிகரிக்கிறதா அரசு ஊழியர்களின் பணி நேரம்..?: மத்திய அமைச்சர் விளக்கம்..!
இந்தியாவில் தற்போது அனைத்து நிறுவனங்களிலும் தினமும் 8 மணி நேரம் என்ற கணக்கில் வாரத்தில் 6 நாட்கள் வேலை முறை அமலில் உள்ளது. இதன் மூலம், ஊழியர்கள் வாரத்துக்கு 48 மணி நேரம் வேலை செய்து வருகிறார்கள்.
இதனிடையே, தொழிலாளர்களுக்கான 4 சட்டங்களை உள்ளடக்கிய புதிய விதிகளை மத்திய அரசு கொண்டு வந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடந்த 2019-ம் ஆண்டு நிறைவேற்றியது.
இந்த புதிய ஊதிய விதிகளை தனியார் நிறுவனங்களில் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இது தனியார் துறையில் பணிபுரியும் அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் வேலை நேரம், சம்பளம் உள்ளிட்டவைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிகிறது. இதனிடையே, இந்த புதிய ஊதிய விதிகள் அரசு நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்றும் கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற மாநிலங்களவையின் கேள்வி நேரத்தின்போது, ‘‘அனைத்து அரசு நிறுவனங்களின் ஊழியர்கள் பணி நேரத்தை 8 மணியிலிருந்து 12 மணி ஆக உயர்த்தும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதா?’’ என்று உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த மத்திய பணியாளர் நலத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங், “அரசு நிறுவனங்களின் ஊழியர்கள் பணி நேரத்தை 8 மணியிலிருந்து 12 மணி ஆக உயர்த்தும் திட்டம் எதுவும் அரசின் பரிசீலனையில்” இல்லை என்று விளக்கம் அளித்தார்.