அரசு அலுவலகத்தில் லஞ்சமா..?: புகார் தெரிவிக்க புது செயலி.. முதல்வர் அதிரடி அறிமுகம்..!
அரசு அலுவலகத்தில் லஞ்சமா..?: புகார் தெரிவிக்க புது செயலி.. முதல்வர் அதிரடி அறிமுகம்..!
ஆந்திர மாநில முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட ஜெகன் மோகன் ரெட்டி பல்வேறு அதிரடி திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
அந்த வகையில், ஊழல் தொடர்பான புகார்களை தெரிவிக்க செல்போன் செயலி ஒன்றை மாநில லஞ்ச ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் அறிமுகம் செய்துள்ளனர்.
'ஏசிபி 14400' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த செயலியை தடேப்பள்ளியில் உள்ள முகாம் அலுவலகத்தில் இருந்து, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தொடங்கி வைத்தார்.
இந்த செயலியை பதிவிறக்கம் செய்த உடன் செல்போனை உறுதி செய்ய ஒரு முறை பயன்படுத்தப்படும் கடவுச்சொல் அனுப்பப்படும். இதை பதிவு செய்து செயலியை திறந்த உடன், நேரடி புகார் மற்றும் புகாரை பதிவு செய்தல் என்ற இரு வாய்ப்புகள் வழங்கப்படும்.
‘நேரடி புகார்' பிரிவில் லஞ்சம் கொடுப்பதை நேரடியாக புகைப்படமாக பதிவு செய்தல், ஆடியோ மற்றும் வீடியோவாக பதிவு செய்ய முடியும்.
‘புகாரை பதிவு செய்தல்’ பிரிவில், லஞ்சம் குறித்த புகாரை பதிவு செய்து அது குறித்து தங்களிடம் உள்ள வீடியோ மற்றும் ஆடியோவை பதிவு செய்து அனுப்ப முடியும். புகாரை அனுப்பிய உடனே அதற்கான பதிவு எண் அனுப்பப்படும்.
தொடர்ந்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் புகாரை ஆய்வு செய்து தேவையான நடவடிக்கை எடுப்பார்கள். இந்த செயலி தற்போது ஆண்ட்ராய்டு போன்களில் மட்டுமே கிடைக்கிறது. விரைவில் ஐபோன்களில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.