இனி இதுதான் தேசியக் கொடியா? – கனிமொழி ஆதங்கம்!!

இனி இதுதான் தேசியக் கொடியா? – கனிமொழி ஆதங்கம்!!

Update: 2022-02-09 09:46 GMT

கர்நாடக மாநிலத்தில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வருவதற்கு எதிராக இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இதனால் சில கல்லூரிகளில் இஸ்லாமிய மாணவ, மாணவியர்கள் குல்லா, ஹிஜாப், பர்தா, புர்கா போன்றவை அணிந்து வர தடை விதிக்கப்பட்டிருந்தது.

இதனை ஏற்கமறுத்த இஸ்லாமிய மாணவிகள், தங்கள் உரிமையில் தலையிடுவதாக கூறி ஹிஜாப் அணிந்தே கல்லூரிக்கு வந்தனர். இதற்கிடையே, உடுப்பி மாவட்டம் குண்டாப்பூர் அரசு கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மாணவர்கள் காவித்துண்டு அணிந்து கல்லூரிக்கு வந்தனர்.

பர்தா அணிந்து வந்த மாணவிகள் வெளியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனை எதிர்த்து மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவித்துண்டு அணிந்து வந்த மாணவர்களுக்கு ஆதரவாக, கல்லூரி மாணவிகளும் காவி ஷால் அணிந்து ஊர்வலம் சென்றனர்.

ஹிஜாப் அணிந்து வரும் இஸ்லாமிய மாணவிகளைக் கல்லூரிக்குள் அனுமதிக்கக் கூடாது. இல்லையென்றால் நாங்கள் காவி ஷால் அணிந்து தான் கல்லூரிக்கு வருவோம் என்று அவர்கள் கூறினார்.

குறிப்பாக, ஹிஜாப் அணிந்து வந்த பெண்ணை காவித்துண்டு அணிந்து வந்த மாணவர்கள் விரட்டியடித்தனர். அதேபோல சிமோகா மாவட்டத்தில் தேசிய கொடியை இறக்கிவிட்டு காவிக்கொடியை ஏற்றிய விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் குறித்து பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், தேசிய கொடியை அவமதிக்கும் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? அல்லது இனி இதுதான் தேசியம், தேசிய கொடி எல்லாம் என்பார்களா? என்று திமுக எம்.பி கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.


newstm.in

Similar News