விடியல் ஆட்சியில் எனக்கு விடியல் இல்லையா..?: நியாயம் கேட்டு கர்ப்பிணி தர்ணா..!
விடியல் ஆட்சியில் எனக்கு விடியல் இல்லையா..?: நியாயம் கேட்டு கர்ப்பிணி தர்ணா..!
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள தலையால் நடந்தான் குளம் தெற்கு தெருவைச் சேர்ந்த காளி ரத்தினம் என்பவரின் மகள் மகாராணி (25). இவரும், அதே பகுதியைச் சேர்ந்த செல்லப்பா என்பவரின் மகன் இசக்கிமுத்து என்பவரும் காதலித்து வந்தனர்.
இந்நிலையில், திருமண ஆசை வார்த்தை கூறிய இசக்கிமுத்து, மகாராணியுடன் நெருங்கிப் பழகினார். இதில், அவர் கர்ப்பமடைந்தார். இதனைத் தொடர்ந்து அவர், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி இசக்கிமுத்துவிடம் கூறியுள்ளார்.
அவரோ, கருவை கலைத்து விட்டால் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, மாத்திரை கொடுத்ததாக தெரிகிறது. இதில் மகாராணியின் கரு கலைந்தது. இதனைத் தொடர்ந்து இருவரும் நெருங்கி பழகியதால் மகாராணி மீண்டும் கர்ப்பமடைந்தார்.
இதுகுறித்து இசக்கிமுத்துவிடம் மகாராணி கூறியபோது, அவர் வழக்கம் போல் கர்ப்பத்தை கலைத்து விடு என்று கூறியதாக தெரிகிறது. மேலும், இசக்கிமுத்துவின் தாய் இசக்கியம்மாள், தந்தை செல்லப்பா, அவரது சகோதரி இசக்கியம்மாள், அத்தை துர்க்கையம்மாள் ஆகியோர் சேர்ந்து கருவை கலைத்து விடு அல்லது நகையுடன் வந்தால் உன்னை ஏற்றுக் கொள்கிறோம் என்று கூறியதாகத் தெரிகிறது.
இதுகுறித்து மகாராணி கடந்த 24-ம் தேதி கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி இசக்கிமுத்து உள்ளிட்ட 5 பேரையும் தேடி வந்தனர்.
இந்நிலையில், “விடியல் ஆட்சியில் ஆறு மாத கர்ப்பிணி எனக்கு மட்டும் விடியல் இல்லையா..? கற்பழிப்பு வழக்கில் ஒரு மாதமாக ஒரு குற்றவாளியும் கைது செய்யப்படவில்லை ஏன்..?” எனும் பதாகை ஏந்தி மகாராணி மற்றும் அவரது தாய் ஆகியோர் கோவில்பட்டி டிஎஸ்பி அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து டிஎஸ்பி உதயசூரியன், அவர்கள் அனைவரையும் கைது செய்து நடவடிக்கை எடுப்பதாக மகாராணி மற்றும் அவரது தாயிடம் உறுதியளித்தார். இதனைத் தொடர்ந்து இருவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.