வாடகைக்கு விடப்படும்.. விவசாயிகள், வணிகர்களுக்கு அமைச்சர் சொன்ன நற்செய்தி..!

வாடகைக்கு விடப்படும்.. விவசாயிகள், வணிகர்களுக்கு அமைச்சர் சொன்ன நற்செய்தி..!

Update: 2022-07-15 07:05 GMT

வரும் ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் அரசு விரைவு பஸ்களில் பார்சல்களை அனுப்பும் திட்டம் அமலுக்கு வருகிறது என்று போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, தமிழக போக்குவரத்து றை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் தமிழகம் முழுவதும் குறைந்த இடைவெளியில், குறுகிய நேரத்தில் பஸ்கள் இயக்கப்படுகிறது.

தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் விளைவிக்கும் அல்லது உற்பத்தி செய்யும் பிரசித்தி பெற்ற பொருட்களை மற்ற ஊர்களுக்கு கொண்டு சென்று வியாபாரம் செய்திட தற்போது லாரி மற்றும் பார்சல் சர்வீஸ்கள் மூலம் எடுத்துச் செல்லப்படுகிறது.

இந்நிலையில், குறைந்த அளவிலான பொருட்களை லாரி வாடகைக்கு இணையாக குறைந்த நேரத்தில் விரைவாக அனுப்ப ஏதுவாக, பொதுமக்கள், விவசாயிகள், வணிகர்கள் மற்றும் அவர் தம் முகவர்கள் தினசரி பொருட்களை இரு ஊர்களுக்கு இடையே அனுப்பும் வகையில், ஒரு மாதம் முழுவதும் பஸ்சில் உள்ள சுமை பெட்டியை மாத வாடகை மற்றும் தினசரி வாடகை செலுத்தி உபயோகித்துக் கொள்ள இத்திட்டம் 3-ம் தேதி முதல் செயல்படுத்தப்பட உள்ளது.

இதன் மூலம், பிரசித்தி பெற்ற திருநெல்வேலி அல்வா, ஊத்துக்குளி வெண்ணை, தூத்துக்குடி மக்ரூன், கோவில்பட்டி கடலை மிட்டாய், திண்டுக்கல் சிறு வாழை, நாகர்கோவில் நேந்திரம் சிப்ஸ் உள்ளிட்ட அனைத்து வகை பொருட்களும் அனுப்பலாம்.

இந்த சேவையை சிறு, பெரு வியாபாரிகள், வணிகர்கள், முகவர்கள் மற்றும் பொது மக்கள் பயன்படுத்திக்கொள்ள அருகிலுள்ள தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்து கழக கிளை மேலாளரிடம் விண்ணப்பிக்க வேண்டும்.

பொதுமக்கள் திருச்சி, மதுரை, சென்னை மார்க்கத்தில் தங்கள் சுமைகளை அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பஸ்களில் அனுப்ப வசதி செய்யப்பட்டுள்ளது” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Similar News