வெயில் அதிகரித்தாலும் இன்று இந்த மாவட்டங்களில் மழை கொட்டும்.. வானிலை மையம் எச்சரிக்கை !!

வெயில் அதிகரித்தாலும் இன்று இந்த மாவட்டங்களில் மழை கொட்டும்.. வானிலை மையம் எச்சரிக்கை !!

Update: 2022-03-18 07:45 GMT

தென் மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் பனிக்காலம் முடிந்து தற்போது வெயில் தொடங்கிவிட்டது. வழக்கமாக ஏப்ரல் மாதத்தில் தான் வெப்பம் அதிகரிக்கும். ஆனால், இந்தாண்டு தற்போதே வெப்பம் அதிகரித்து பல மாவட்டங்களில் வெப்பத்தின் அளவு நூறு பாரான்ஹீட் அளவை தாண்டி பதிவாகி வருகிறது.

இந்த நிலையில், இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, கிழக்கு மற்றும் வடகிழக்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெற்று, 19ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதனையொட்டி, மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
 


மேலும், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.


newstm.in

Similar News