மாஸ்க் அணியாததால் அபராதம் விதித்த அதிகாரியை தாக்கிய நகைக்கடை உரிமையாளர் ?

மாஸ்க் அணியாததால் அபராதம் விதித்த அதிகாரியை தாக்கிய நகைக்கடை உரிமையாளர் ?

Update: 2022-07-16 08:10 GMT

முகக்கவசம் அணியாததால் அபராதம் விதித்த மாநகராட்சி அதிகாரியை தாக்கிய நகைக்கடை உரிமையாளரை போலீசார்  கைது செய்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தொற்று தடுப்பு விதிமுறைகளை கடைபிடிக்குமாறு அரசு அறிவுறுத்தி உள்ளது. அதன்படி முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னை மயிலாப்பூர் பஜார் சாலையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் கடைகளில் முகக்கவசம் அணியும்படி மாநகராட்சி அதிகாரிகள் வலியுறுத்தி வந்தனர். மேலும், விதிமீறிய கடைகளுக்கு அபராதம் விதித்தனர்.

அப்போது, அதே பகுதியில் இயங்கி வந்த சாந்தா கோல்டு ஹவுஸ் என்ற நகைக்கடையில் பணியாற்றும் ஊழியர்கள், உரிமையாளர், வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணியாமல் இருந்துள்ளனர். இதனை பார்த்த மாநகராட்சி அதிகாரிகள் அவர்களிடம் முகக்கவசம் அணியுமாறு அறிவுறுத்தியுள்ளனர். மேலும், நகைக்கடையில் உடலின் வெப்பநிலையை அளவிடும் கருவியும் இல்லை. அதே போல வாடிக்கையாளர்களுக்கு சானிடைசர் வழங்கப்படாதது தெரியவந்ததால் கொரோனா விதிகளை கடைபிடிக்குமாறு கடை உரிமையாளர் சந்தோஷ் குமாரிடம் தெரிவித்து அபராதம் விதிக்க அதிகாரிகள் முற்பட்டுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த சந்தோஷ்குமார், மாநகராட்சி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளார். மேலும் மாநகராட்சி சுகாதாரத்துறை உதவி ஆய்வாளர் முரளியின் சட்டையை பிடித்து சந்தோஷ்குமார் தாக்கியுள்ளார். கடையின் உரிமையாளர் சந்தோஷ்குமார் மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி முரளியை தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இதனிடையே நேற்று  காலை மாநகராட்சி அதிகாரிகள் வந்து கடையை சோதனை செய்தபோது கடையின் உரிமம் கடந்த மார்ச் மாதமே முடிவடைந்திருந்ததும், உரிமம் புதுபிக்காமல் கடையை நடத்தி வந்ததும் தெரியவந்தது. இதனால் மாநகராட்சி அதிகாரிகள் கடைக்கு காலவரையறையின்றி சீல் வைத்தனர். மேலும் மயிலாப்பூர் போலீசார் கடையின் உரிமையாளரான சந்தோஷ்குமாரை கைது செய்தனர்.

 

newstm.in

Similar News