அதற்காக அரசியலுக்கு வரவில்லை.. கமல்ஹாசன் ஓப்பன் டாக்..!

அதற்காக அரசியலுக்கு வரவில்லை.. கமல்ஹாசன் ஓப்பன் டாக்..!

Update: 2022-06-14 05:40 GMT

கமல்ஹாசன் நற்பணி இயக்க நண்பர்களை ஒருங்கிணைத்து, உதவி தேவைப்படுவோருக்கு துரிதமாக ரத்தம் வழங்கும் வகையில் ‘கமல்ஸ் பிளட் கம்யூனி’ என்ற பெயரில் புதிய திட்டம் தொடங்கப்பட்டது.

அதன் தொடக்க விழா இன்று காலை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் மநீம தலைவர் கமல்ஹாசன் தலைமையில் நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன், “எனக்கு வள்ளல் பட்டம் தேவையில்லை. உண்மையில் நடப்பவை பற்றிதான் நான் 'விக்ரம்' பட பாடலில் எழுதியுள்ளேன்.

நான் ஏற வேண்டிய மலை பெரிய மலை, படிப்படியாக ஏறி வருகிறேன். என் வைராக்கியமும், வீரமும் இன்னும் குறையவில்லை. சிறையில் இருந்தால் தான் தலைவர் என்பது இல்லை; திரையில் இருந்தாலும் தலைவர் தான்.

நான் சினிமாவை விட்டுக்கொடுக்கவில்லை. சினிமா என் தொழில். நான் அரசியலுக்கு சம்பாதிக்க வரவில்லை. ரத்த தானம் கொடுத்தால் நாம் அனைவரும் சிபிசக்கரத்தியாக மாறலாம்.

அரசியல் என்பது வெறும் ஓட்டு எண்ணிக்கையோ அல்லது எவ்வளவு கமிஷன் வாங்கலாம் என்பது அல்ல. ஒரு ஏழையை பணக்காரன் ஆக்கும் வியாபாரம் அல்ல அரசியல்.

ஏழைகளை அவ்வாறு இல்லாமல் செய்வதுதான் அரசியல். தெருவில் ஒருவர் மட்டும் பணக்காரனாக இருக்க கூடாது. தெருவில் இருக்கும் அனைவருமே பணக்காரராக இருக்க வேண்டும்.

என்னை நடிக்க விட்டால் நான் 300 கோடி சம்பாதிப்பேன். தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு சென்றது எனக்கு அடுத்த பலமாக இருந்தது. சினிமா என்பது எனது தொழில், அது தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்.

இன்னொரு முறை நாக்கின் மேல் பல்லைப் போட்டு ஏன் நடிக்க சென்றீர்கள் என்று கேட்காதீர்கள். எனக்கு பயந்து ஒடுங்க வேண்டிய அவசியமில்லை.

என்னை மிரட்ட வேண்டும் என்றால் என் அரசியல் பேச்சுகளை வைத்து மட்டும் மிரட்டலாம். ஏனென்றால், உண்மையைச் சொன்னால் அவர்களுக்கு கோபம் வரும். காரணம் உண்மையை சொல்வது தான் நேர்மை என்று சொல்லி வளர்க்கப்பட்டவன் நான்” எனப் பேசினார்.

Similar News