எங்களை படிக்க வைத்தது காமராஜர் - எங்களை குடிக்க வைத்தது காங்கிரஸ்..!!
எங்களை படிக்க வைத்தது காமராஜர் - எங்களை குடிக்க வைத்தது காங்கிரஸ்..!!
தூத்துக்குடியில் கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் 13 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
இந்த சம்பவத்தின் 4-ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி தூத்துக்குடியில் பல்வேறு இடங்களில் நேற்று நடைபெற்றது. இதையொட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமையில் 2,500-க்கும் மேற்பட்டோர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த யாரும் நினைவுநாள் நிகழ்ச்சிகளில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டது.
இந்நிலையில், சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகமான ராவணன் குடியில் நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்டத்தில் உயிர் இறந்தவர்களின் 4-ம் ஆண்டு நினைவுநாளையொட்டி உயிரிழந்தவர்களின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினார்கள். பின்னர் செய்தியாளர்களை சீமான் பேசிய அவர், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது வாகனத்தில் ஏறி நின்று துப்பாக்கியால் குறி பார்த்து சுடுவதற்கு யார் அனுமதி கொடுத்தது என்றும் இதுகுறித்து முன்னாள் முதல்வரிடம் கேட்டபோது அது பற்றி தெரியாது நானே தொலைகாட்சியில் பார்த்ததுதான் தெரிந்து கொண்டேன் என்று கூறுகிறார் என்றும் தெரிவித்தார்.
மேலும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் இறந்தவர்களுக்கு வணக்கம் செலுத்துவதற்கு கூட தூத்துக்குடியில் அனுமதி கிடைக்கவில்லை அவர்கள் உயர் தியாகம் செய்ததை வீணாகாமல், அந்த ஆலை மீண்டும் திறக்காமல் இருக்க நாங்கள் போராடுவோம் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ராஜீவ் காந்தியை விடுதலைப் புலிகள் தான் கொன்றார்கள் என நான் பேசவில்லை. நாங்கள் கொல்லவில்லை என்று தொடர்ந்து கூறியபோது கண்டு கொள்ளாதவர்கள் நாங்கள்தான் கொன்றோம் என்று கூறியதும் அதை கவனித்தார்கள் அவர்கள் கவனிக்கவே அப்படி கூறினேன். காங்கிரஸ் கட்சி இந்த நாட்டின் அரசியல் செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும். எங்களை படிக்க வைத்தது தாத்தா காமராஜர். ஆனால் எங்களை குடிக்க வைத்தது காங்கிரஸ். அதிகம் கல்வி பெற்ற மாநிலம் கேரளா தான், அதில் எங்கே திராவிட ஆட்சி உள்ளது. திமுக ஆட்சி 7 பேர் விடுதலைக்கு எடுத்து வச்ச ஒரு நடவடிக்கை காமிக்க முடியுமா? அண்ணாமலை மற்றும் அழகிரியை என்னிடம் விவாதத்திற்கு வர சொல்லுங்கள், இதற்காக தான் பாஜக தமிழ்நாட்டுக்கு தேவை, இதற்காக தான் காங்கிரஸ் தமிழ் நாட்டுக்கு தேவை என்று சொல்ல சொல் என்றும் காங்கிரஸ் கட்சியும் பாஜகவும் தமிழ்நாட்டிற்கு எதற்கு என்று கேள்வி எழுப்பினார்.