கோவில் பெயரை சொல்லி ரூ.50 லட்சம் மோசடி.. யூடியூபர் கார்த்திக் கோபிநாத் கைது..!

கோவில் பெயரை சொல்லி ரூ.50 லட்சம் மோசடி.. யூடியூபர் கார்த்திக் கோபிநாத் கைது..!

Update: 2022-05-30 11:42 GMT

பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் மதுரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது.

இந்நிலையில், கடந்த ஆண்டு இந்தக் கோவிலில் உள்ள சிலைகளை மர்ம நபர்கள் உடைத்ததாக எழுந்த புகாரால் பெரும் சர்ச்சை வெடித்தது.

அப்போது, மனநிலை பாதிக்கப்பட்டதாக கூறப்படும் ஒருவரை போலீசார் கைது செய்தனர். ஆனால், மாற்று மதத்தினர் தான் கோவில் சிலைகளை இடித்ததாக இந்து அமைப்பினர் புகார் தெரிவித்தனர்.

இதனிடையே, பாஜக ஆதரவாளரும் யூடியூபருமான கார்த்தி கோபிநாத் என்பவர் சிறுவாச்சூர் கோயிலை புனரமைக்கப் போவதாகக் கூறி, இந்து சமய அறநிலையத்துறையின் அனுமதி இல்லாமல் இணையம் மூலம் ரூ.50 லட்சம் வரை நிதி வசூல் செய்து மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

இதுகுறித்து சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ் அளித்த புகாரின் பேரில், கார்த்திக் கோபிநாத்தை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

கார்த்திக் கோபிநாத் அளிக்கும் பதில்கள் அடிப்படையில், அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கார்த்திக் கோபிநாத் கைதுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “திமுக தங்களுக்கு எதிரான குரல்களை ஒடுக்க முயற்சிக்கிறது.

கார்த்திக் கோபிநாத்தின் தந்தையிடம் நான் பேசினேன். கார்த்திக் கோபிநாத்துக்கு ஆதரவாக நிற்போம். தமிழக பாஜகவின் சட்டக் குழுவினர் கார்த்திக் கோபிநாத்துக்கு ஆதரவாக இருப்பர்” என்று பதிவிட்டுள்ளார்.

Similar News