காதல் திருமணம் செய்த தம்பதி கடத்தல்..

காதல் திருமணம் செய்த தம்பதி கடத்தல்..

Update: 2022-02-02 12:05 GMT

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள பாச்சாரப்பாளையம் நடுத்தெருவை சேர்ந்தவர் தனஞ்செயன். இவரது மனைவி பாக்கியம். தனஞ்செயன், தனது உறவினர்களுடன் கடலூர் எஸ்பி அலுவலகத்திற்கு வந்தார். அங்கு, எஸ்பி சக்திகணேசனை சந்தித்து மனு ஒன்றை அளித்தார்.

அந்த மனுவில், “எனது மகன் தாமரைக்கண்ணன்(23), சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அவரும், எங்கள் ஊரைச் சேர்ந்த திமுக பிரமுகர் அருள்முருகன் மகள் மகாலட்சுமி (20) என்பவரும் காதலித்து வந்தனர்.

மகாலட்சுமி, திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் படித்து வருகிறார். இருவரும் கடந்த வாரம் திருமணம் செய்து கொண்டனர். மேலும், தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு எஸ்பி அலுவலகத்திலும் மனு அளித்தனர்.

இதனை தொடர்ந்து அவர்கள் சென்னையில் உள்ள பாஜக பிரமுகரிடம் தஞ்சம் அடைந்தனர். பின்னர் எனது மகனும், மருமகளும் சென்னையில் இருந்து காரில் நேற்று முன்தினம் இரவு பாச்சாரப்பாளையத்துக்கு புறப்பட்டனர்.

மரக்காணம் அருகே வந்தபோது, அருள்முருகன் மற்றும் சிலர் அவர்களை வழிமறித்து இருவரையும் காரில் கடத்திச்சென்று விட்டனர். ஆகவே அவர்கள் 2 பேரையும் மீட்டுத்தர வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து தனஞ்செயன், வடலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் அருள்முருகன் மற்றும் சிலர் மீது வடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News