திருவட்டார் கோவிலில் 418 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேகம்.. நாளை உள்ளூர் விடுமுறை

திருவட்டார் கோவிலில் 418 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேகம்.. நாளை உள்ளூர் விடுமுறை

Update: 2022-07-05 19:58 GMT

கன்னியாகுமரி திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் 108 வைணவ ஸ்தலங்களில் சிறப்புமிக்கது. இங்கு திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்தி 418 ஆண்டுகளாகிவிட்டது. இந்த நிலையில் கும்பாபிஷேகம் நடத்த பக்தர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை ஏற்று திரு ப்பணிகளை செய்து கும்பாபிஷேகம் நடத்த முதலமைச்சர் உத்தர விட்டார். இதனைத் தொடர்ந்து தேவபிரசன்னம் பார்க்கப்பட்டு திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஜூலை 6ஆம் தேதி கும்பாபிஷேகம் நடத்துவதற்கு நாள் குறிக்கப்பட்டுள்ளது.

இதற்கான பூஜைகள் கடந்த 29ம் தேதி முதல் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக சிறப்பு பூஜைகள், நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.
விழாவின் 7ம் நாளான இன்று காலை கணபதி ஹோமம், தொடர்ந்து சுவாமிக்கு அபிஷேகம், ஸ்ரீமத் பாகவத பாராயணம், மதியம் அன்னதானம் ஆகியன நடைபெற்றது.

 நாளை (6ம்தேதி) அதிகாலை 3.30 க்கு கணபதி ஹோமம், பிரசாத பிரதிஷ்டை, சுப முகூர்த்தத்தில் பிரதிஷ்டை, உபதேவன்மார்களுக்கு பிரதிஷ்டை உள்ளிட்டவை நடக்கின்றன. காலை 5.10 மணி முதல் 5.50 மணி வரை பிரதிஷ்டை, ஜீவ கலச அபிஷேகம் ஆகியவை நடக்கின்றன. காலை 6 மணி முதல் 6.50க்குள் அஷ்ப பந்தன மகா கும்பாபிஷேகப் பெருவிழா நடக்கிறது.

கும்பாபிஷேக விழாவில் அமைச்சர்கள் சேகர்பாபு, மனோ தங்கராஜ், தமிழ்நாடு அரசின் அறநிலையத்துறை  முதன்மை செயலாளர் பி.சந்திரமோகன், அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், விஜய் வசந்த் எம்.பி., கலெக்டர் அரவிந்த், எஸ்.பி. ஹரிகிரன் பிரசாத் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள். கும்பாபிஷேகம் நிறைவடைந்ததும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலை 5 மணிக்கு பகவதி சேவை, சோபானத்தில் பத்மமிட்டு அத்தாழ பூஜை நடக்கிறது. மாலை 6 மணிக்கு  லட்சதீபம் ஏற்றப்படுகிறது. மாலை 6.30 மணிக்கு தீபாராதனை நடைபெறுகிறது.

இந்த நிலையில், திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்தை யொட்டி 6ஆம் தேதி (நாளை மறுநாள்) கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  
 
newstm.in

Similar News