எல்கேஜி, யுகேஜி மாற்றமில்லை.. அமைச்சர் அன்பில் மகேஷ் ‘அந்தர் பல்டி’..!
எல்கேஜி, யுகேஜி மாற்றமில்லை.. அமைச்சர் அன்பில் மகேஷ் ‘அந்தர் பல்டி’..!
அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் நிறுத்தப்படுவதாக அறிவித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், தற்போது அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடரும் எனத் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில், அரசுப் பள்ளிகளின் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் கடந்த அதிமுக ஆட்சியின்போது, தொடக்கப் பள்ளிகளையும், அங்கன்வாடிகளையும் இணைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி, அரசுப் பள்ளிகளுடன் இணைந்து செயல்படும் அங்கன்வாடிகளில் படிக்கும் மாணவர்களை, அரசுப் பள்ளிகளின் எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி. வகுப்பில் சேர்க்க முடிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், நடப்பாண்டில் அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் நிறுத்தப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்தது.
இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சமீபத்தில் கூறியதாவது: “பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இருந்த எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி. வகுப்புகள் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் அங்கன்வாடி மையத்திற்கு மாற்றப்பட்டு உள்ளன.
அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளை சேர்த்துக் கொள்ளலாம். அதில் பணியாற்றிய ஆசிரியர்கள் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புகளுக்கான பணியில் முழுமையாக ஈடுபடுத்தப்படுவர்” என்று அவர் கூறியிருந்தார்.
பள்ளிக் கல்வித்துறையின் இந்த முடிவுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பல அரசியல் கட்சியினரும் அரசின் இந்த முடிவை திரும்ப பெற வலியுறுத்தி வந்தனர்.
இதையடுத்து, அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடர்ந்து செயல்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
தற்போது அவர் கூறுகையில், “பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று முதல்வரின் அறிவுரையின்படி அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடர்ந்து செயல்படும்.
எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு தகுதியான சிறப்பு ஆசிரியர்கள் தேவையான இடங்களில் நியமிக்கப்படுவர்” எனத் தெரிவித்தார்.