உள்ளாட்சி தேர்தல் அமைதியாக நடைபெற்றது- டிஜிபி சைலேந்திர பாபு

உள்ளாட்சி தேர்தல் அமைதியாக நடைபெற்றது- டிஜிபி சைலேந்திர பாபு

Update: 2022-02-20 06:42 GMT

தமிழகத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் அமைதியாக நடைபெற்றது என காவல்துறை தலைமை இயக்குநா் சி.சைலேந்திரபாபு தெரிவித்தாா்.

தமிழகத்தில் 21 மாநகராட்சி, 138 நகராட்சி மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு என மொத்தம் 648 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான  வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது.

பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.

இந்த நிலையில், நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் அமைதியாக நடைபெற்று முடிந்ததாக காவல்துறை தலைமை இயக்குநா் சி.சைலேந்திரபாபு தெரிவித்தாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் நடைபெற்ற நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் அமைதியாக நடைபெற்றது. சில இடங்களில் வாக்குவாதம், சாலை மறியல் உள்ளிட்ட சிறிய பிரச்சனைகள் ஏற்பட்டன. பிரச்னைக்குரிய இடங்களுக்கு காவல்துறையினா் விரைந்து சென்று நடவடிக்கை எடுத்து, அமைதியை நிலைநாட்டினா்.

பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டதாலும், அதிரடிப்படையினா் குவிக்கப்பட்டதாலும் வன்முறை சம்பவங்கள் தவிா்க்கப்பட்டன. தோ்தலில் நிகழ்ந்த சில சம்பவங்கள் குறித்து சட்டப்பூா்வ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பொதுமக்களிடமிருந்து சமூக ஊடகங்கள் மூலமாகவும், தொலைபேசி எண்கள் மூலமாகவும் தகவல்கள் பெறப்பட்டு, காவல்துறையினா் உடனடி நடவடிக்கை எடுத்தனா். தகவல் தெரிவித்த பொதுமக்களுக்கு காவல்துறை நன்றியை தெரிவித்துக் கொள்கிறது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்று அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
 

newstm.in

Similar News