மூதாட்டியிடம் செயின் பறித்த காதலர்கள்.. விசாரணையில் வெளியானது பகீர் தகவல்..!
மூதாட்டியிடம் செயின் பறித்த காதலர்கள்.. விசாரணையில் வெளியானது பகீர் தகவல்..!
கோவை மாவட்டம், தொண்டாமுத்தூரை சேர்ந்த மூதாட்டி காளியம்மாள். இவர், கடந்த 28-ம் தேதி நரசிபுரம் சாலையில் உள்ள தீயணைப்பு நிலையம் அருகே ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இளம் ஜோடி, மூதாட்டியிடம் முகவரி கேட்பது போல் நடித்து, மூதாட்டி அணிந்திருந்த 5 சவரன் தங்கச் சங்கிலியை கண்ணிமைக்கும் நேரத்தில் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து காளியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பவ இடத்தின் அருகில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில், காளியம்மாளிடம் தங்கச் செயினை பறித்தவர்கள் வந்த இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணை கண்டுபிடித்தனர்.
அந்த எண்ணைக் கொண்டு, அதன் உரிமையாளரான சோமையம்பாளையத்தை சார்ந்த பிரசாத் (20) என்பவரையும், அவருடைய காதலியான சுங்கம் பகுதியைச் சேர்ந்த தேஜஸ்வினி (20) என்பவரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், இருவரும் பேரூர் பச்சாபாளையம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக் மூன்றாவது ஆண்டு படித்து வருவதும், காதலர்களான இருவரும் தொழிலதிபர்களின் வாரிசுகள் என்பதும், காதலியுடன் உல்லாசமாக ஊர் சுற்ற சில மாதங்களுக்கு முன்னர் பிரசாத் தனது வீட்டில் இருந்த 30 சவரன் நகையை திருடி இருப்பதும், நகைகள் திருடு போனது தொடர்பாக காவல் துறை விசாரித்த போது தங்கள் மகன் பிரசாத் தான் திருடன் என தெரிந்ததால் அவரது பெற்றோர் புகாரை திரும்பப் பெற்றிருப்பதும் தெரியவந்துள்ளது.
அதேபோல, ஆன்லைன் பந்தயத்தில் பிரசாத் ஏராளமான பணத்தை இழந்ததால் நகை பறிப்பில் ஈடுபட முடிவு செய்தார். இதற்கு உடந்தையாக காதலியை பயன்படுத்தி நகை பறிப்பில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து இருவரையும் கைது செய்த காவல்துறையினர், அவர்களிடமிருந்து 5 சவரன் தங்கச் செயினை மீட்டனர். அத்துடன், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.