மேற்கு வங்கத்துக்குப் பயணம் மேற்கொண்ட ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சிலிகுரியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், கொரோனா அலை முடிவுக்கு வந்த உடன் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்துவோம் என்றார்.
இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய மம்தா கூறியதாவது, “ஒன்றிய உள்துறை அமைச்சர் என்ற அடிப்படையில் உங்கள் (அமித்ஷா) மீது எனக்கு மரியாதை உள்ளது. ஆனால், நான் என்ன செய்ய வேண்டும் என்று எனக்குப் பாடம் கற்பிக்க வேண்டாம். மாநிலத்தை ஆளுமாறு எல்லைப் பாதுகாப்புப் படையை வலியுறுத்தாதீர்கள். நேபாளம், பூடான் மற்றும் வங்கதேச எல்லைகளைப் பாதுகாப்பதுதான் உங்கள் பணி. பசு கடத்தப்படுவதையும், ஊடுருவலையும் தடுப்பதுவே இவர்களது பணி. நெருப்புடன் விளையாட வேண்டாம்.” என்று கூறினார்.
தொடரந்து பேசிய அவர், 2024-ல் பாஜக ஆட்சிக்கு வரமாட்டார்கள். தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு மற்றும் குடியுரிமை திருத்தச்சட்டம் என எதுவும் அமல்படுத்தப்படாது. ஒரு வருடம் கழித்து அவர் இங்கு வந்துள்ளார். எல்லைப் பாதுகாப்புப் படையை அரசியலில் ஈடுபடுத்தவே அவர் இங்கு வந்துள்ளார். எல்லைப் பாதுகாப்புப் படையை நான் மதிக்கிறேன். ஆனால், அமித்ஷாவின் வலையில் எல்லைப் பாதுகாப்புப் படை விழுந்துவிடக் கூடாது.ஆட்டம் முடிந்துவிட்டது என்று நினைக்க வேண்டாம். நாங்கள் (எதிர்க்கட்சிகள்) ஒன்றிணைந்து வருவோம் என்றார்.