தமிழ்நாடு முழுவதும் மருத்துவத்துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு!!
தமிழ்நாடு முழுவதும் மருத்துவத்துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு!!
கடந்த சில நாட்களுக்கு முன் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் சமீபத்தில் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்த புகாரில், சிறுமியின் தாய் இந்திராணி பணத்துக்காகத் தனியார் மருத்துவமனைகளில் தன்னுடைய கருமுட்டையை விற்பனை செய்ததாகவும், தன் தாயின் 2-வது கணவர் சையத் அலி தன்னை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் சிறுமி குறிப்பிட்டிருந்தார். சிறுமியின் இந்த புகாரையடுத்து காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்து விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.
அந்த புகாரின் அடிப்படையில், அவரின் தாய் இந்திராணி, வளர்ப்புத் தந்தை சையது அலி, இடைத்தரகர் மாலதி, அந்த சிறுமியின் ஆதார் அட்டையை மாற்றிக்கொடுத்த ஜான் ஆகியோரை போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்து போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த சூழ்நிலையில் நேற்று முதல் மருத்துவக்குழுவினர் சிறுமியிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர். அதன் அடிப்படையில், மருத்துவமனைகளின் பக்கம் அதிகாரிகளின் விசாரணை சூடுபிடித்திருக்கிறது. சிறுமியிடம் நடத்திய விசாரணையின் போது மேலும் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளது.
விசாரணையில், சிறுமி ஈரோடு, சேலம், ஓசூர் போன்ற பல்வேறு பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும், ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கும், கேரளாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கும் அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். ஒவ்வொரு முறையும் சிறுமியின் கருமுட்டைக்கு ரூ. 25 ஆயிரம் வரை பணம் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவரின் தாயார் சிறுமியின் 13 வயதிலிருந்தே கருமுட்டையை விற்பனை செய்துவந்திருக்கிறார்.
சிறுமி அளித்த தகவல்களின் அடிப்படையில், ஈரோட்டில் தனியார் மருத்துவமனைகளில் சென்னை மருத்துவ குழுவினர் விசாரித்தனர். இதேபோல் சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள பிருந்தாவன் சாலையில் இருக்கும் ஒரு தனியார் மருத்துவமனைக்கு இன்று பகல் 3 மணி அளவில் சுகாதாரத்துறை இணை இயக்குனர் விஸ்வநாதன் தலைமையில் ஒரு காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 7 பேர் கொண்ட குழுவினர் சென்று, தீவிர விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில், இந்த சம்பவத்தின் எதிரொலியாக இதேபோல் வேறு எதேனும் சிறுமிகளிடம் இவ்வாறு கருமுட்டை பெறப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை நடத்த மருத்துவ துறையினர் திட்டமிட்டுள்ளனர். அந்த வகையில், தமிழ்நாடு முழுவதும் பல மாவட்டங்களில் மருத்துவத்துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு நடத்தினர்.