நாட்டையே உலுக்கிய மருத்துவ மாணவி வழக்கு.. கணவர்தான் குற்றவாளி என நீதிபதி தீர்ப்பு !!
நாட்டையே உலுக்கிய மருத்துவ மாணவி வழக்கு.. கணவர்தான் குற்றவாளி என நீதிபதி தீர்ப்பு !!
பெரும் விசாரணைக்கு பிறகு மருத்துவ மாணவி மரணம் வழக்கில் அவரது கணவர் தான் குற்றவாளி என நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.
கேரள மாநிலத்தில் கடந்த ஆண்டு ஆயுர்வேத மருத்துவ மாணவி விஸ்மயா- கிரண் குமார் என்பவரை திருமணம் செய்துகொண்டார். பெரியளவில் இவர்களின் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு வரதட்சனையாக 1 ஏக்கர் மதிப்பிலான ரப்பர் தோட்ட நிலம், 100 பவுன் நகை, ரொக்கம் என விஸ்மயா பெற்றோர், மாப்பிள்ளை வீட்டாருக்கு வழங்கினர்.
இருப்பினும் மேலும் வரதட்சணை கேட்டு கணவர் விஸ்மயாவை மோசமாக துன்புறுத்தினார். பெரும் கொடுமை நடந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் குளியலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த விவகாரம் கேரளா மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.
கேரளாவில் பல்கலைக்கழக மாணவர்கள் வரதட்சனை வாங்கமாட்டோம் என உறுதிமொழி எடுக்கும் அளவுக்கு இந்த விவகாரம் அங்கு புயலை கிளப்பியது. வரதட்சணைக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து கிரண் மீது விஸ்மயா குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட கிரண் குமார், இந்திய அரசியலமைப்பு சட்ட 304 பி (வரதட்சணை கொடுமையால் மரணம்), 498 ஏ (கணவர் அல்லது உறவினரால் கொடுமைப்படுத்தப்படுவது), 306 (தற்கொலைக்கு தூண்டுதல்), 506 (மிரட்டல் விடுவது) உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் கைது செய்யப்பட்டார்.
கடந்த ஓராண்டாக நீதிமன்ற காவலில் உள்ள கிரண் குமாரின் ஜாமீன் மனு பலமுறை நிராகரிக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு மார்ச் மாதம் அவருக்கு ஜாமீன் கிடைத்தது. இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை கேரள மாநிலம் கொல்லம் கீழமை நீதிமன்றத்தில் முடிந்து தீர்ப்புக்காக காத்திருந்தனர்.
விசாரணையின்போது, 42 சாட்சியங்கள், 108 ஆவணங்கள் மற்றும் விஸ்மயாவின் செல்போன் உரையாடல்கள் ஆகியவற்றை விசாரணை அறிக்கையாக ஏற்றுகொள்ளப்பட்டது. அனைத்து தரப்பு விசாரணைகளும் முடிவடைந்த நிலையில் நீதிபதி இன்று தீர்ப்பு வழங்கினார்.
அந்த தீர்ப்பில் நீதிபதி கூறியிருப்பதாவது, போலீசாரின் சாட்சியங்கள், மருத்துவ பரிசோதனை அடிப்படையில் `விஸ்மயாவின் கணவர் கிரண் குமார் தான் குற்றவாளி என உறுதியாகிறது. வரதட்சணை கொடுமை, உடல் அல்லது மனநலப் பாதிப்பை ஏற்படுத்துதல், தற்கொலைக்குத் தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கிரண் குமார் குற்றவாளி என தீர்ப்பளிக்கபடுகிறது. தண்டனை விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும், இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டது.
இதைதொடர்ந்து கிரணின் ஜாமீன் ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் மீண்டும் சிறைசெல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது. நாளையே தண்டனை விவரம் அறிவிக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த தீர்ப்பு நாடு முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
.
newstm.in