இனி சென்னை சிக்னல்களில் ‘மெல்லிசை’.. காவல் துறை அறிவிப்பு..!!

இனி சென்னை சிக்னல்களில் ‘மெல்லிசை’.. காவல் துறை அறிவிப்பு..!!

Update: 2022-05-31 15:52 GMT

சென்னையில் இன்றைய நிலவரப்படி சுமார் 60 லட்சம் வாகனங்கள் உள்ளன. கடந்த 15 ஆண்டுகளில் இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்துள்ளது.

சென்னையில் ஆண்டுக்கு சராசரியாக 10 சதவிகிதம் வரை வாகனங்களின் உயர்வதால், போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் சிக்னல்களில் நீண்டநேரம் காத்திருக்க நேரிடுகிறது. இதற்காக சென்னை பெருநகர காவல் துறையின் போக்குவரத்துப் பிரிவு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக 302 சிக்னல்களை ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கும் திட்டத்தை அமல்படுத்துவதன் மூலம் வாகனங்களின் காத்திருப்பு நேரத்தை குறைக்க போக்குவரத்து காவல் துறை பிரிவு முடிவு செய்துள்ளது.

மேலும், போக்குவரத்து சிக்னல்களில் நிற்கும் வாகன ஓட்டிகளின் மன அழுத்தத்தை போக்கும் வகையில் இசையமமைப்பாளர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், ஹாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்டோரின் பாடல்களை ஒலிபரப்ப போக்குவரத்து காவல் துறை திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து, சென்னை பெருநகர காவல் துறையின் போக்குவரத்துப் பிரிவு கூடுதல் காவல் ஆணையர் கபில்குமார் சி.சாரத்கர் கூறுகையில், போக்குவரத்து சிக்னல்களில் நிற்கும் வாகன ஓட்டிகளின் மன அழுத்தத்தைப் போக்கும் வகையிலும், சிக்னல்களில் இதமான சூழ்நிலையை உருவாக்கும் வகையிலும் மெல்லிசை ஒலிபரப்பத் திட்டமிடப்பட்டது. தற்போது இத்திட்டம் சில இடங்களில் சோதனை முறையில் அமல்படுத்தப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகளிடம் இருந்து இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால், முதல்கட்டமாக 42 சிக்னல்களில் இத்திட்டத்தை விரிவுபடுத்தவுள்ளோம் என்றார்.

Similar News