மேட்டூர் அணையை திறந்தாச்சு.. அடுத்து இன்று ஆய்வுக்கு புறப்படும் முதலமைச்சர் !!
மேட்டூர் அணையை திறந்தாச்சு.. அடுத்து இன்று ஆய்வுக்கு புறப்படும் முதலமைச்சர் !!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணியை ஆய்வு செய்கிறார்.
மேட்டூர் அணையில் இருந்து வழக்கத்தைவிட கோடைக்காலத்திலேயே குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் டெல்டா விவசாயிகள் உற்சாகமடைந்துள்ளனர். காவிரிடெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் குறுவை சாகுபடி சிறப்பாக நடைபெற வேண்டும் என்பதற்காக ஆறுகள், வடிகால்கள், வாய்க்கால்கள் தூர்வாரும் பணி நடந்து வருகிறது. இந்த பணி நிறைவடையும் தருவாயில் உள்ளது.
இந்தநிலையில் தூர்வாரும் பணியை ஆய்வு செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று திருச்சி செல்கிறார். அங்கு ஆய்வுக்கு பின்னர் அங்கிருந்து புறப்பட்டு கார் மூலம் நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு செல்கிறார். வேளாங்கண்ணியில் மு.க.ஸ்டாலின் இரவு தங்கிவிட்டு அங்கு நாளை கல்லாறு வடிகால் தூர்வாரும் பணியை ஆய்வு செய்கிறார்.
பின்னர் அவர், மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் வாய்க்கால் தூர்வாரும் பணியை ஆய்வு செய்கிறார். தொடர்ந்து திருவாரூர் மாவட்டம் காட்டூரில் மறைந்த முதலமைச்சர் கருணாநிதி அருங்காட்சியகம் அமைக்கும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். பின்னர் அங்கிருந்து தஞ்சை மாவட்டத்துக்கு செல்லும் அவர், அம்மாப்பேட்டை அருகே கொக்கேரி கிராமத்தில் பிமனோடி வாய்க்கால் தூர்வாரும் பணியை ஆய்வு மேற்கொள்கிறார்.
இதனையடுத்து திருச்சி விமான நிலையம் செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு செல்கிறார்.
newstm.in