லட்சக் கணக்கானோர் வேலையிழக்கும் அபாயம்.. பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்..!
லட்சக் கணக்கானோர் வேலையிழக்கும் அபாயம்.. பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்..!
பருத்தி, நூல் ஆகியவற்றின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் விசைத்தறி தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில், பருத்தி, நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், “தமிழகத்தில், ஜவுளித் துறையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து தங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். ஏற்கனவே பருத்தி இறக்குமதி மீதான வரியை குறைக்க வலியுறுத்தி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோருக்கு கடிதம் எழுதி இருக்கிறேன்.
துரதிருஷ்டவசமாக பருத்தி மற்றும் நூல் விலை உயர்ந்து இருக்கிறது. இதனால் தமிழகத்தில் ஜவுளித்துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக விசைத்தறி ஆலைகள், உற்பத்தி கூடங்கள், விற்பனையகங்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. போட்ட முதல் தொகையை கூட எடுக்க முடியாத நிலைக்கு உற்பத்தியாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
இதனால் அவர்களுக்கு கடும் இழப்பு ஏற்பட்டு ஏராளமான சிறு குறு ஜவுளி உற்பத்தியகங்கள் ஏற்கனவே மூடப்பட்டுவிட்டன. ஏராளமான வேலைவாய்ப்பை உருவாக்கி வரும் இந்த ஜவுளித்துறையில் ஏற்பட்டிருக்கும் நஷ்டம் லட்சக்கணக்கானோருக்கு வேலை இழப்பை ஏற்படுத்தி வருகிறது.
கூட்டுறவுத்துறையில் அங்கம் வகிக்கும் கைத்தறி நெசவாளர்களும் இதனால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதிக விலைக்கு நூல்களை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், வாடிக்கையாளர்களுக்கு துணி ஏற்றுமதி செய்ய இயலவில்லை.
எனவே, பருத்தி மற்றும் நூல் இருப்பை கட்டாயம் அறிவிக்க வேண்டும். இறக்குமதி வரிச்சலுகையை செப்டம்பர் 30-ம் தேதி வரை நீட்டிக்க வேண்டும்.
விசைத்தறி நிறுவனங்கள் கடன் பெறுவதற்கான கால அளவு ஆண்டுக்கு 8 மாதங்களாக உயர்த்தப்பட வேண்டும். வங்கிகள் பிடித்தம் செய்யும் 25 சதவீத தொகையை 10 சதவீதமாக குறைக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.