ஈபிஎஸ் விமர்சனத்திற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி!!
ஈபிஎஸ் விமர்சனத்திற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி!!
முதலமைச்சரின் துபாய் பயணம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பச்சைப்பொய்களை பரப்பி வருவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் மேற்கொண்டு இருக்கக்கூடிய துபாய் வெளிநாட்டு பயணத்தைக் குறித்து விமர்சனம் செய்து பேட்டியினை கொடுத்திருக்கிறார்கள்.
முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணம் தனி விமானத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டிருப்பது என்பது அவர் விமான பயணம் மேற்கொள்ளப்பட்டிருக்கிற சூழ்நிலையில், விமான வசதிகள் அதற்கான அந்த availability கிடைக்காத காரணத்தினால், அந்த தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
ஏற்பாடு செய்த அந்த தனி விமானத்திற்குக் கூட திராவிட முன்னேற்றக் கழகம் தான் அதற்கான செலவுகளை ஏற்றுக்கொண்டிருக்கிறதே ஒழிய, அரசாங்கத்தினுடைய நிதி செலவழிக்கப்படவில்லை என்பதை நான் முதலிலே தெளிவுப்படுத்த விரும்புகிறேன்.
முதலமைச்சருடைய இந்தப் பயணம் என்பது முதலீடுகளை ஈர்ப்பதற்காக மாத்திரம் அல்ல, அயலகத்திலே கடைக்கோடி தமிழகத்தில் இருந்து இங்கு வந்து வியர்வை சிந்தி உழைத்துக் கொண்டிருக்கக்கூடிய ஒவ்வொரு தமிழ்க் குடும்பத்தினுடைய வளத்திற்காகவும், வாழ்விற்காகவும் அவர் இந்தப் பயணத்தை இங்கே மேற்கொண்டிருக்கிறார்.
நம்முடைய உலக வர்த்தகப் பொருட்காட்சி என்பது முடிவுறும் தருவாயில் முதலமைச்சர் அவர்கள் வந்திருக்கிறார் என்று, இது கோவிட் காலத்தினாலேயே தள்ளிப்போய் வந்திருக்கிறது. இன்னொன்று இது ஆரம்பிக்கும்போது வந்திருக்கக்கூடிய வரவேற்பைவிட, முடியும் பொழுது தான் மிகப் பெரிய கூட்டம் வந்திருக்கிறது.
கடந்த ஒரு வாரத்தில் தான் உலகின் பல பகுதியிலிருந்தும் இங்கே வந்திருந்தார்கள். இந்தச் சமயத்தில் வந்து திறந்து வைப்பது தான் அது சரியான ஒரு வாய்ப்பாக இருக்கும் என்பதை முதலமைச்சர் உணர்ந்து தான் இந்தப் பயணம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்பதையும் தெளிவுப்படுத்த விரும்புகிறேன்.
எடப்பாடி பழனிச்சாமி தொழில் முதலீடுகள் குறித்து பேசியிருக்கிறார்கள். நான் கேட்க விரும்புவது, அவர் முதலமைச்சராக இருந்தபோது மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டுப் பயணங்களினால் எத்தனை ஆயிரம் கோடி முதலீடுகள் வந்தது. இன்றைக்கு முதலமைச்சர் இந்த மூன்று நாட்களில் துபாய், அபுதாபி பயணங்களில் ஏறத்தாழ 6,200 கோடிக்கு முதலீடுகளை ஈர்த்துள்ளார்.
கடந்த ஆட்சியில் அவர்கள் மேற்கொண்ட பயணத்தின் வாயிலாக ஈர்த்தாக சொல்லப்படும் முதலீடுகள் குறித்து சட்டமன்றத்தில் நான் மிகத் தெள்ளத்தெளிவாக விளக்கிக் கூறி அவையெல்லாம் அவை குறிப்பில் இடம் பெற்றிருக்கிறது என தெரிவித்துள்ளார்.
newstm.in