அண்ணாமலைக்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர்!!
அண்ணாமலைக்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர்!!
சென்னை விமான நிலையத்தில் அண்ணாமலை செய்தியாளரை சந்தித்து, திமுக தனது தேர்தல் அறிக்கையில் பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்பதாகச் சொல்லியிருந்தது. தேர்தல் வாக்குறுதியில் சொன்னதை இந்த அரசு செய்ய வேண்டும். 72 மணி நேரத்தில் சொன்னதைச் செய்ய வேண்டும். இல்லையென்றால் கோட்டையை முற்றுகையிடுவோம் என்று எச்சரிக்கை விடுத்தார்.
இந்நிலையில், கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் கடைவீதியில் திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூடத்தில் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது, “தமிழ்நாட்டில் பெண்களுக்கு அரசு பேருந்தில் இலவச பயணம், நகை கடன் தள்ளுபடி, மஞ்சள் பை திட்டம் என பல்வேறு செயல்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளது. மக்களுக்கு பயன் பெறும் வகையில் தமிழக அரசின் பல சாதனைத் திட்டங்கள் தொடர்ந்து அமையும்” என்றார்.
அதனைத் தொடர்ந்து பேசிய அவர், “72 மணி நேரத்தில் பெட்ரோல் டீசல் விலையை குறைக்கவில்லையெனில் கோட்டையை முற்றுகையிடுவோம் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். அவ்ளோ தைரியமா? பாத்துடலமா? இது திமுக ஆட்சி; சொன்னதை செய்து காட்டியவர் முதல்வர் மு.க.ஸ்டாலின். உங்களது மிரட்டல்களுக்கு திமுக அஞ்சாது” என்றார்.
மேலும், அண்ணாமலைக்கு சவால் விட என்ன தகுதி இருக்கிறது. அண்ணாமலை சொந்த ஊரான கரூர் மாவட்டத்தை தாண்ட முடியாது. கர்நாடகாவில் இருந்து காவிரி நீரை தமிழகத்திற்கு கொடுக்க கூடாது என்று கூறிய அண்ணாமலை தான் தற்போது பாஜக தலைவர். இவர் தமிழகத்தில் மத கலவரத்தை உருவாக்க பார்க்கிறார், இது திமுகவின் ஆட்சி; சவாலுக்கு பயப்பட மாட்டோம் என்று கூறியுள்ளார்.
தற்போது அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.