காணாமல் போன தலித் இளம்பெண் முன்னாள் அமைச்சரின் ஆசிரமத்தில் சடலமாக மீட்பு !
காணாமல் போன தலித் இளம்பெண் முன்னாள் அமைச்சரின் ஆசிரமத்தில் சடலமாக மீட்பு !
உத்தர பிரதேச மாநிலம் உன்னாவோவில் 22 வயது தலித் சமூகத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பவில்லை. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 8ஆம் தேதி காணாமல் போனதாகவும் அவரை கண்டுபிடித்து தரக்கோரியும் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக நடத்திய விசாரணையில் இளம்பெண் கடத்தப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, வழக்குப் பதிவு செய்த போலீசார் ஜன.10 ஆம் தேதி வழக்கில் தொடர்புடைய ஒருவரைக் காவல்துறையினர் கைது செய்தனர். அடுத்தகட்ட விசாரணையில் கடந்த ஜன.24ஆம் தேதி இளம்பெண் கடத்தலில் முக்கிய குற்றவாளியாக முன்னாள் அமைச்சர் மறைந்த ஃபதே பகதூர் சிங்கின் மகன் ரஜோல் சிங்கும் கைதானார்.
இந்த நிலையில், ஜன-25ஆம் தேதியன்று இறந்த இளம்பெண்ணின் தாயார் சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ், பிரச்சார வாகனத்தின் முன் தற்கொலை முயற்சியை மேற்கொண்டார். மாயமான இளம்பெண்ணின் அழுகிய உடலை ஜோல் சிங்குக்கு சொந்தமான ஆசிரமத்தில் காவல்துறையினர் கண்டெடுத்து பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.
இதுகுறித்து பெண்ணின் தாயார் கூறுகையில், எனது மகளை ராஜோல் சிங், அவரது ஆசிரமத்தில் கொன்று அங்கேயே புதைத்து விட்டார். நான் முன்பு ஆசிரமத்திற்கு சென்றபோது மூன்று மாடிக் கட்டிடத்தைத் தவிர மற்ற வளாகத்தை காட்டினார்கள். உள்ளூர் காவலர் ஒருவரை அழைத்தேன், அவர் அழைப்பை எடுக்கவில்லை. ஒருவேளை அவர் வந்திருந்தால் என் மகள் உயிருடன் இருப்பதைக் கண்டிருப்பேன், எனத் தெரிவித்தார்.
பிரேத பரிசோதனையின் அறிக்கையை கொண்டு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தலைமறைவான கூட்டாளிகளை தேடி வருகிறோம் என்றும் உன்னாவ் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சஷி சேகர் சிங் தெரிவித்துள்ளார்.
newstm.in