தமிழகத்தில் மேலும் தளர்வுகள்.. அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்..!

தமிழகத்தில் மேலும் தளர்வுகள்.. அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்..!

Update: 2022-03-02 18:32 GMT

தமிழகத்தில் தற்போது அமலில் உள்ள கொரோனா ஊரடங்கில் மேலும் தளர்வுகளை அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் ‘முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் காரணமாக கொரோனா நோய்த் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டும், மக்களின் இயல்பு வாழ்க்கை முழுமையாக மீள திரும்புவதற்கு ஏதுவாக பின்வரும் தளர்வுகள் அறிவிக்கப்படுகின்றன.

1.இதுவரை நடைமுறையில் இருந்து வந்த சமுதாய, கலாச்சார மற்றும் அரசியல் கூட்டங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை 3-3-2022 முதல் நீக்கப்படுகிறது.

மேலும், தொற்றுப் பரவலை கட்டுக்குள் வைத்திட, 3-3-2022 முதல் 31-3-2022 வரை கீழ்க்கண்ட செயல்பாடுகள் கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்படுகிறது.

2.திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகள் 500 நபர்களுக்கு மிகாமல் நடத்த அனுமதிக்கப்படும்.

3.இறப்பு சார்ந்த நிகழ்வுகள் அதிகபட்சமாக 250 நபர்களுடன் நடத்த அனுமதிக்கப்படும்.

மேற்சொன்ன இரண்டு கட்டுப்பாடுகள் தவிர்த்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக விதிக்கப்பட்டிருந்த இதர கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்படுகின்றன.

மக்களின் வாழ்வாதாரம் கருதி அரசால் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் பொது இடங்களில் தொடர்ந்து கட்டாயம் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.

மேலும் இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

கொரோனா தொற்றிலிருந்து மக்களை காத்திட அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு உங்கள் அனைவரையும் கனிவுடன் கேட்டுக் கொள்கிறேன்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Similar News