திருப்பூரில் பரபரப்பு.. தாயும் இரண்டு குழந்தைகளும் அடித்துக் கொலை..!
திருப்பூரில் பரபரப்பு.. தாயும் இரண்டு குழந்தைகளும் அடித்துக் கொலை..!
திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் முத்துமாரி. இவர், கடந்த 15 நாட்களுக்கு முன்பு திருப்பூர் நெருப்பெரிச்சல் அரசுப் பள்ளி வீதியில் ஒரு வீட்டில் தனது மகன்கள் தரணீஷ் (9) மற்றும் நித்தீஷ் (6) ஆகியோருடன் குடியேறியுள்ளார்.
இந்நிலையில், இவருடைய வீட்டுக்கு ஒருவர் அடிக்கடி வந்து செல்வது வழக்கமாக இருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இன்று காலை வீட்டிற்கு வந்த அந்த நபருடன் முத்துமாரி தகராறு செய்ததாகவும், சிறிது நேரத்தில் அந்த நபர் மட்டும் வீட்டை விட்டு வெளியேறியதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து அந்த வீட்டின் உரிமையாளர் வீட்டிற்குச் சென்று பார்த்தபோது, அங்கு தாய் மகன் உட்பட மூன்று பேரும் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளனர்.
உடனடியாக அவர், காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 3 பேர் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவ இடத்தில் மாநகர காவல் ஆணையர் ஏ.ஜி.பாபு தலைமையிலான காவலர்கள் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் அந்த நபர் யார், எதற்காக கொலை நடந்தது..? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தாய், சிறு குழந்தைகள் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.