மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் அதிகாரியின் கார் ஓட்டுநர் சடலமாக மீட்பு !!
மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் அதிகாரியின் கார் ஓட்டுநர் சடலமாக மீட்பு !!
மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் அதிகாரியின் கார் ஓட்டுநர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் இணை ஆணையராக பணியாற்றி வருபவர் காவேரி. இவருக்கு கார் ஓட்டுநராக ஜெயச்சந்திரன் என்பவர் பணியாற்றி வந்தார். இந்நிலையில் சென்னை மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான திருமண மண்டபம் வி.என். நகரில் உள்ளது. அங்கு நேற்று இரவு ஜெயச்சந்திரன் மர்மமான முறையில் தூக்கில் சடலமாக கிடந்துள்ளார்.
அப்போது அங்கு அருகே இருந்த சக ஊழியர்கள் மற்றும் ஜெயச்சந்திரன் மனைவியும் சேர்ந்து ஜெயச்சந்திரனை மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஜெயச்சந்திரன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து அவரது உடல் ராயப்பேட்டை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பபட்டது. இதனிடையே, மைலாப்பூர் போலீசார் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
முதற்கட்ட விசாரணையில், ஜெயச்சந்திரன் சில மாதங்களாக மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக தகவல்கள் கூறுகின்றன. நேற்றும் வழக்கம் போல் இணை ஆணையர் காவேரிக்கு கார் ஓட்டிவிட்டு வந்துள்ளார். அதன்பின்னரே அவர் தற்கொலை செய்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இவரின் தற்கொலைக்கான காரணம் என்ன என்று போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜெயச்சந்திரனின் செல்போனை ஆய்வு செய்து வருகிறார்கள். மேலும் மனைவி, அவருடன் பணியாற்றிய ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலின் இணை ஆணையரின் கார் ஓட்டுநர், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in