உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தொடர்ந்து 7 நாட்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக உக்ரைன் நாட்டின் தலைநகர் கீவ் மற்றும் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் உள்ளிட்ட இடங்களில், ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.ரஷ்யப் படைகளின் தாக்குதலுக்கு உக்ரைன் நாட்டு ராணுவத்தினரும் பதிலடி கொடுத்து வருகின்றன. உக்ரைன் மீது ரஷ்யப் படைகள் நடத்தி வரும் தாக்குதல் சர்வதேச அரங்கில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. 

இந்த தாக்குதலில், இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்தார். இதை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகமும் உறுதிப்படுத்தி உள்ளது. ரஷ்யப் படைகள் நடத்திய தாக்குதலில் இந்திய மாணவர் உயிரிழந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், கர்நாடக மாணவர் நவீன் உயிரிழப்புக்கு நீட் தேர்வும் ஒரு காரணம் என்று அம்மாநில முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,

“ஏழை மற்றும் நடுத்தர குடும்ப மாணவர்களின் மருத்துவக் கனவை நீட் தேர்வு சிதைக்கிறது. உயர்கல்வி என்பது பணம் இருப்பவர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது, பணம் இல்லாதவர்களுக்கு மறுக்கப்படுகிறது. உக்ரைனில் கர்நாடக மாணவர் நவீன் உயிரிழந்ததற்கு நீட் தேர்வே காரணம். இந்தியாவில் மருத்துவ சீட் மறுக்கப்பட்டதாலேயே நவீன் உக்ரைனில் மருத்துவம் படிக்க சென்றார். தகுதி என்ற போர்வையில் கிராமப்புற மாணவர்களுக்கு நீட் தேர்வு அநீதி இழைக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.


 

Tags: