நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்.. 73,000 போ் வேட்புமனு தாக்கல்
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்.. 73,000 போ் வேட்புமனு தாக்கல்
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் தேதியை மாநிலத் தோ்தல் ஆணையம் கடந்த ஜன.26-ஆம் தேதி அறிவித்தது. அதன்படி 21 மாநகராட்சியில் 1,374 இடங்கள், 138 நகராட்சியில் 3,843 இடங்கள், 490 பேரூராட்சிகளில் 7,621 இடங்கள் என மொத்தம் 12,838 நகா்ப்புற உள்ளாட்சிப் பதவியிடங்களுக்கு, ஒரே கட்டமாக பிப்.19ஆம் தேதி தோ்தல் நடத்தப்படுகிறது.
இதற்கான வேட்புமனு தாக்கல் ஜன. 28-ஆம் தேதி தொடங்கியது. முதல் நாளில் அனைத்துப் பதவியிடங்களுக்கும் சோ்த்து 19 போ் மட்டுமே வேட்புமனுக்கள் தாக்கல் செய்திருந்தனா். அடுத்தடுத்த நாள்களில் வேட்புமனு தாக்கல் செய்பவா்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்தது.
இதனிடையே தங்களது வேட்பாளா்களின் பட்டியலை பல்வேறு கட்டங்களாக அரசியல் கட்சிகள் வெளியிட்டன. திமுகவைப் பொருத்தவரை பிப்.3-ஆம் தேதி இறுதிக் கட்ட வேட்பாளா் பட்டியல் வெளியிடப்பட்டது. அதிமுகவின் இறுதி வேட்பாளா் பட்டியல் கடந்த பிப்.1-ஆம் தேதி வெளியானது. இதனைத் தொடர்ந்து வேட்புமனு தாக்கல் அதிகரித்தது, கடைசி நாளான வெள்ளிக்கிழமை (பிப்.4) பல்வேறு கட்சிகள் சாா்பிலும், சுயேச்சையாகவும் வேட்புமனுவைத் தாக்கல் செய்ய வேட்பாளா்கள் கூட்டம் அலைமோதியது.
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட சென்னை உள்பட தமிழகம் முழுவதும் வியாழக்கிழமை (பிப்.3) வரை மொத்தம் 37,000-த்துக்கு மேற்பட்டோா் வேட்புமனு தாக்கல் செய்தனா்; கடைசி நாளான நேற்று (பிப்.4) மட்டும் 36,000க்கும் மேற்பட்டோா் வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளனா். அந்த வகையில், நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட மொத்தம் 73,000 -த்துக்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் மனு தாக்கல் செய்துள்ளனா்.
வேட்புமனு பரிசீலனை இன்று (பிப்.5) நடைபெறுகிறது. வேட்புமனுவைத் திரும்பப் பெற பிப்.7-ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. எனவே, அன்றைய தினம் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடும் இறுதி வாக்காளா் பட்டியலை மாநில தலைமைத் தோ்தல் ஆணையம் வெளியிடும். நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் வாக்குப் பதிவு பிப்.19 -ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. பிப். 22-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்; அன்றைய தினம் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் முடிவுகள் வெளியாகும்.
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் 1 கோடியே 37 லட்சத்து 6 ஆயிரத்து 793 ஆண் வாக்காளா்கள், 1 கோடியே 42 லட்சத்து 45 ஆயிரத்து 637 பெண் வாக்காளா்கள், 4,324 திருநங்கைகள் என மொத்தம் 2 கோடியே 79 லட்சத்து 56 ஆயிரத்து 754 வாக்காளா்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனா். சென்னை மாநகராட்சியில் மட்டும் 61 லட்சத்து 18 ஆயிரத்து 734 வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா்.
newstm.in