பாஜக அண்ணாமலைக்கு நப்பாசை.. கலாய்த்து தள்ளிய செல்லூர் ராஜூ !!

பாஜக அண்ணாமலைக்கு நப்பாசை.. கலாய்த்து தள்ளிய செல்லூர் ராஜூ !!

Update: 2022-02-14 17:32 GMT

தமிழகத்தை ஆளுகிற பொறுப்பை திராவிட இயக்கங்களுக்கு மட்டுமே மக்கள் அளிப்பார்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பதிலடி கொடுத்துள்ளார்.

மதுரையில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நாளை பிரச்சாரம் செய்ய உள்ளார். அதற்கான முன்னேற்பாடு பணிகளை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா ஆகியோர் இன்று பார்வையிட்டனர்.
 
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜூ, குடும்ப பெண்களுக்கு 1,000 ரூபாய் கொடுப்போம் என பரப்புரையில் முதலமைச்சர் சொல்கிறார். ஆனால், திமுக சொன்னதை செய்ததாக வரலாறு இல்லை. திமுக ஆட்சியின் மீது மக்கள் கொதிப்பாக உள்ளார்கள், சிறுபான்மை மக்களின் ஆதரவும் அதிமுகவிற்கு இப்போது அதிகமாக இருக்கிறது. திமுகவிற்கு வாக்களித்து செய்த தவறுக்கு பரிகாரம் செய்யும் வகையில், இப்போது மக்கள் அதிமுகவுக்கு ஆதரவு அளிக்கிறார்கள்” என்றார்.

இந்த தேர்தல் திமுக - பாஜக இடையே தான் நடக்கிறது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறிய கருத்து தொடர்பாக கேள்வி எழுப்பியப்போது, பாஜகவின் அளவுகோல் என்ன என்பது அண்ணாமலைக்கு நன்றாக தெரியும். உள்ளாட்சி தேர்தல் முடிவு பாஜகவிற்கு பாடம் கற்பிக்கும். தேவை இல்லாமல் அண்ணாமலை ஏதாவது பேசிக்கொண்டு இருக்கிறார். அவருக்கு நப்பாசை இருக்கிறது. ஏற்கனவே, நயினார் நாகேந்திரன் பேசியதற்கு எப்படி வாங்கி கட்டி கொண்டார் என்பது எல்லோருக்கும் தெரியும்.

தமிழகம் பெரியார், அண்ணா உருவாக்கிய திராவிட பூமி. தமிழக வளர்ச்சி உடன் இந்தியாவில் உள்ள வேறு எந்த மாநிலமும் போட்டியிட முடியாது. அண்ணாமலை என்ன பேசினாலும் மக்கள் ஏற்க மாட்டார்கள். ஆளுகிற பொறுப்பை திராவிட இயக்கத்திற்கு தான் மக்கள் கொடுப்பார்கள், பாஜகவிற்கு அளிக்க மாட்டார்கள்.
 

கொள்கை என்பது வேஷ்டி மாதிரி. கூட்டணி என்பது துண்டு மாதிரி.. தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி மாறுபடும். அடுத்த தேர்தலில் மக்களின் மனநிலையை அறிந்து கொண்டு பாஜகவுடன் கூட்டணி வைப்பது குறித்து முடிவு செய்வோம், என்றார்.


newstm.in

Similar News