நீட் விலக்கு மசோதா.. ஆளுநர் அளித்த உறுதி- முதல்வர் ஸ்டாலின் அறிக்கை !!

நீட் விலக்கு மசோதா.. ஆளுநர் அளித்த உறுதி- முதல்வர் ஸ்டாலின் அறிக்கை !!

Update: 2022-03-15 17:13 GMT

மருத்துவ படிப்பில் சேர்வதற்கு மாணவர்கள் நீட் எனும் நுழைவுத் தேர்வை ஆண்டுதோறும் எழுதுகின்றனர். இதற்கு தமிழகத்தில் இருந்து கடும் எதிர்ப்பு உள்ளது. கிராமப்புற மாணவர்கள் தேர்ச்சி பெறுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. ஏராளமான மாணவர்கள் நீட் தேர்வு அச்சம் காரணமாக தற்கொலை செய்து கொள்ளும் சோகமும் கடந்த சில ஆண்டுகளாக தொடர்கிறது.

இந்த நிலையில், கடந்த ஆண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவிக்கு வந்ததும் சட்டசபையில் நீட் தேர்விற்கு எதிராக மசோதா நிறைவேற்றி தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதாவின் மீது விளக்கம் கேட்டு ஆளுநர் நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழக அரசிற்கு திருப்பி அனுப்பிவைத்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தியது. இந்த ஆலோசனையின் முடிவில் மீண்டும் சட்டசபை கூட்டத்தை கூட்டி நீட் தேர்விற்கு எதிராக மசோதா நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் 8ஆம் தேதி கூட்டப்பட்ட சிறப்பு சட்டசபை கூட்டத்தில் நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றி, தமிழக ஆளுநர் ரவிக்கு மீண்டும் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த தீர்மானம் நிறைவேற்றி ஒரு மாத காலத்திற்கும் மேல் ஆகிவிட்டது. இதுவரை இந்த மசோதா மீது ஆளுநர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளார்.

இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கிண்டி ஆளுநர் மாளிகைக்கு சென்று ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று மதியம் சந்தித்தார். அப்போது நீட் தேர்வு மசோதா மீது விரைவாக நடவடிக்கை எடுத்து குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைக்க வலியுறுத்தியதாக தெரிகிறது.

இச்சந்திப்புக்கு பின்னர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டுக்கு நீட் தேர்விலிருந்து விலக்களிக்கக் கோரும் மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பதாக ஆளுநர் உறுதி அளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதே போன்று பல மாதங்களாக நிலுவையில் இருக்கும் சட்டமுன்வடிவுகள் மற்றும் கோப்புகள் மீது உடனடி நடவடிக்கை எடுப்பதன் மூலம், தமிழ்நாடு சட்டமன்றத்தின் மாண்பைக் காப்பதுடன், தமிழக மக்களின் உணர்வுகளை மதிப்பதாகவும் அமைந்திடும் என தமிழக ஆளுநரிடம் தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் சுட்டிக்காட்டி வலியுறுத்தினார்.

newstm.in

Similar News