நெல்லை கல்குவாரி விபத்து – மேலும் ஒரு சடலம் கண்டெடுப்பு!!
நெல்லை கல்குவாரி விபத்து – மேலும் ஒரு சடலம் கண்டெடுப்பு!!
நெல்லை - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள முன்னீர்பள்ளம் கல்குவாரியில் சுமார் 350 அடி ஆழத்தில் வெடிவைத்து பாறைகள் உடைக்கப்பட்டன. அதனை லாரிகளில் ஏற்றும் பணியில் 10க்கும் மேற்பட்ட தொழிலாளிகள் ஈடுபட்டனர்.
அந்த பணியில் 2 லாரிகள், 3 ஹிட்டாச்சி இயந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தன. அப்போது எதிர்பாராத விதமாக ராட்சத பாறை உடைந்து கல்குவாரியில் விழுந்தது. பாறை இடுக்குகளில் 6 பேர் சிக்கினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தகவலறிந்து நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, டிஐஜி பிரவேஷ்குமார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இந்நிலையில் முருகன், விஜய் ஆகிய இரண்டு பேர் மீட்கப்பட்டு நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
17 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்ட லாரி ஓட்டுநர் செல்வம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து குவாரியில் சிக்கியிருந்த லாரி ஓட்டுனர்கள் செல்வகுமார், ராஜேந்திரன் மற்றும் கிளீனர் முருகன் ஆகிய மூவரை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் 48 மணி நேர போராட்டத்திற்கு பிறகு கிளீனர் முருகன் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். மீதமுள்ள இரண்டு பேரை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற உள்ளது.
newstm.in