நெல்லை கல்குவாரி மீட்புப்பணி.. சிஐஎஸ்எஃப் வீரருக்கு பாராட்டு..!
நெல்லை கல்குவாரி மீட்புப்பணி.. சிஐஎஸ்எஃப் வீரருக்கு பாராட்டு..!
நெல்லை கல்குவாரி விபத்தில் மீட்பு பணியில் ஈடுபட்ட ஓய்வுபெற்ற மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரருக்கு மதிமுக மாவட்டச் செயலாளர் தங்கச் சங்கிலி அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.
நெல்லை அடை மிதிப்பான் குளம் கல்குவாரியில் கடந்த 14-ம் தேதி இரவு ஏற்பட்ட விபத்தில் 6 பேர் பாறைகளுக்கு இடையே சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்பது மீட்புப் படையினருக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்தது.
நெல்லை காவல் துறையினர், நெல்லை தீயணைப்புத் துறையினர், கனிம வளத்துறையின் ஆலோசனை நிபுணர்கள், வருவாய்த்துறையினர், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் என பல்வேறு தரப்பினர் இந்த மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், மத்திய தொழில் பாதுகாப்பு படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் மரிய மைக்கேல். இவர், பேரிடர் பயிற்சிகளை வழங்குவதில் நிபுணத்துவம் பெற்றவர். தீயணைப்பு துறையினருக்கு சில பயிற்சிகளை வழங்கி வந்துள்ளார்.
கல்குவாரி விபத்து சம்பவத்தில் தீயணைப்புத் துறையினர் அழைப்பின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற மரிய மைக்கேல், தன் உயிரை பணயம் வைத்து மீட்புப் பணிகளில் தீவிர ஈடுபாட்டுடன் பணியாற்றி வந்தார்.
இந்த மீட்புப் பணியில், மிகுந்த சிரமங்களுக்கு இடையில் இரண்டு பேர் உயிருடனும், நான்கு பேர் சடலமாகவும் மீட்கப்பட்டனர்.
மீட்புப் பணியில் தன் உயிரை பொருட்படுத்தாது தொய்வின்றி ஈடுபட்ட மரிய மைக்கேலுக்கு, மதிமுகவின் நெல்லை மத்திய மாவட்ட செயலாளர் நிஜாம் ரூபாய் 60 ஆயிரம் மதிப்புள்ள தங்கச் சங்கிலி அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.
இந்த நிகழ்வில், மதிமுகவின் மாநில அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர் கல்லத்தியான், பாளை வடபகுதி செயலாளர் மணப்படை மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.