வெறும் 3 நாட்களில் ரூ.4.39 லட்சம் மதிப்புள்ள நகை, ரூ.1.5 லட்சம் பணம் சம்பாதித்த புதுப்பெண் !
வெறும் 3 நாட்களில் ரூ.4.39 லட்சம் மதிப்புள்ள நகை, ரூ.1.5 லட்சம் பணம் சம்பாதித்த புதுப்பெண் !
மும்பையில், மணமகனின் குடும்பத்தினர் மணமகளுக்கு ரூ.1.5 லட்சம் கொடுத்து தங்கள் மகனுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். மேலும் மணமகளுக்கு வகைவகையாக நகைகளை வாங்கி அணிவித்து அழகுபார்த்துள்ளனர். திருமணமும் முடிந்தது. மூன்று நாட்கள் மட்டுமே புதுமண தம்பதிகள் சந்தோஷமாக இருந்த நிலையில், அடுத்து மணமகளின் செயல் ஒட்டுமொத்தமாக பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மணமகனின் தந்தையான தொழிலதிபர் போலீசாரிடம் அளித்த புகாரில், மலாட் பகுதியில் தாங்கள் சொந்தமாக மருத்துவமனை வைத்துள்ளதாகவும், தனது 28 வயது மகனுக்கு இருந்த குறைபாடு காரணமாக அவருக்கு நீண்ட நாட்களாக வரண் தேடியும் அமையாமல் இருந்து வந்துள்ளது.
இதைத்தொடர்ந்து, தரகர் உதவியுடன் ஆஷா கெய்க்வாட் என்ற பெண்ணை தங்கள் மகனுக்கு திருமணம் முடிக்க முடிவுசெய்தோம். ஆஷா, தனக்கு பெற்றோர் கிடையாது, அத்தை மனிஷா காஷய்ப்பால் தான் தன்னை வளர்த்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, இரு தரப்பும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கவே, மணமகன் வீட்டாரிடம் தரகர் ரூ.10,000 கேட்டு பெற்றுள்ளார். இதன்பின்னர், மார்ச் 29ஆம் தேதி கோவிலில் வைத்து இருதரப்பு குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் நடந்துள்ளது.
இதையடுத்து, திருமணத்தை பதிவு செய்வதற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய குடும்பத்தினர் நீதிமன்றத்திற்கு சென்றபோது, ஆஷாவின் அத்தை மனிஷா ஆவணத்தில் கையெழுத்திட ரூ.1.5 லட்சம் கேட்டுள்ளார். மணமகனின் குடும்பத்தினரும் அவர் கேட்ட பணத்தை தருவதற்கு ஒப்புக்கொண்டுள்ளனர். இதன் பின்னர் புதுமணப் பெண் ஆஷா மணமகன் வீட்டிற்குச் சென்று மூன்று நாட்கள் இருந்துள்ளார். அதற்கு அடுத்தநாள் மணமகன் வீட்டில் கொடுத்த நகைகளை அணித்திருந்த ஆஷா, கடைக்கு சென்றுவருவதாக கூறி வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார்.
நீண்ட நேரமாகியும் ஆஷா வீட்டிற்கு திரும்பாததால் மணமனின் தந்தை ஆஷாவின் செல்போனுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அவரது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது என புகாரில் தெரிவித்துள்ளார். இதையடுத்து, தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மணமகனின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் ஆஷா கெய்க்வாட் மற்றும் அவரை குடும்பத்திற்கு அறிமுகப்படுத்திய முகவர் கமலேஷ் மற்றும் ஆஷாவின் அத்தை என்று கூறிய மனிஷா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில், ஆஷாவுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் இருப்பதாகவும், பணத்திற்காக மட்டுமே இதைச் செய்ததாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
newstm.in