ஊனத்துடன் குழந்தை வளர்வதை தவிர்க்க புதிய திட்டம்.. முதல்வர் தொடங்கி வைத்தார்..!
ஊனத்துடன் குழந்தை வளர்வதை தவிர்க்க புதிய திட்டம்.. முதல்வர் தொடங்கி வைத்தார்..!
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில், தமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்டத்தின் கீழ், தமிழ்நாடு மாநில சுகாதாரப் பேரவையை தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தின் ஓர் அம்சமாக, சுகாதார கொள்கை வகுப்பதில் குடிமக்களின் ஈடுபாட்டை மேலும் மேம்படுத்தும் நோக்கில் மாவட்ட மற்றும் மாநில அளவில் சுகாதாரப் பேரவை கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.
இத்தைகய மக்கள் சபைக் கூட்டங்கள் மூலம், சுகாதார அமைப்பில் வெளிப்படைத் தன்மையும், பொறுப்புணர்வும் மேம்படும், சுகாதாரம் மற்றும் மருத்துவம் தொடர்பான கொள்கை முடிவு எடுப்பதில் சமுதாயத்தின் ஈடுபாடும், பங்கேற்பும் அதிகரிக்கும்.
இப்பேரவையை தொடங்கி வைக்க தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு வருகை புரிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், கர்ப்பிணி தாய்மார்களுக்கான ஆரம்ப நிலை கரு வளர்ச்சி குறைபாடுகளை கண்டறிந்திட ஒரு கோடி ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ள மருத்துவக் கருவிகளின் சேவையை தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு அரசு, கர்ப்பிணித் தாய்மார்களுக்கு டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித் திட்டத்தின் கீழ் நிதி உதவி, பேறுசார் மற்றும் குழந்தை நல ஒப்புயர்வு மையங்கள், சீமாங்க் மையங்கள் போன்ற பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, இந்தியாவிலேயே முதல் முறையாக மாநில மருத்துவமனையில் அதாவது அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில், வெளிநாட்டிலிருந்து பிரத்யேகமாக மருத்துவக் கருவி தருவிக்கப்பட்டு அமைக்கப்பட்டுள்ளது.
இம்மருத்துவமனையில் சிறப்பாக செயல்பட்டு வரும் அதிநவீன முழு உடல் பரிசோதனை மையத்தில், சிறப்பு தனித் தொகுப்பாக, ஆரம்ப நிலை கரு பரிசோதனைக்கு 1000 ரூபாயும், இப்பரிசோதனையுடன் கர்ப்பிணித் தாய்க்கு கூடுதலாக பரிசோதனைகள் மேற்கொள்ள 2000 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆரம்ப கர்ப்ப காலத்தில் (11 - 14 வாரங்கள்) இந்த பரிசோதனை செய்வதன் மூலமாக கரு மரபணு சார்ந்த பல பிரச்சனைகள் கண்டறியப்பட்டு, உடல் உறுப்பு ஊனத்துடன் குழந்தை வளர்வது தவிர்க்கப்படும்’ என்று, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.