அடுத்த அதிர்ச்சி.. திமுக வேட்பாளர் மாரடைப்பால் மரணம்..!

அடுத்த அதிர்ச்சி.. திமுக வேட்பாளர் மாரடைப்பால் மரணம்..!

Update: 2022-02-17 10:58 GMT

தமிழகத்தில் வருகிற 19-ம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் முடிய உள்ள நிலையில், தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். வேட்பாளர்களும் வீடு வீடாகச் சென்று ஓட்டு வேட்டையாடி வருகிறார்கள்.


இந்நிலையில், ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை பேரூராட்சியின் 2-வது வார்டில் திமுக சார்பில் போட்டியிடுபவர் சித்து ரெட்டி. வருகிற 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கும் நிலையில், அவர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

நேற்று இரவு பிரச்சாரம் முடித்து விட்டு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சித்து ரெட்டிக்கு, இன்று அதிகாலை நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரது குடும்பத்தினர் பூதப்பாடி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.


அதன் பின்னர் உடல்நிலை மிகவும் மோசமானதால், மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே சித்து ரெட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.

திமுக வேட்பாளர் சித்து ரெட்டி உயிரிழந்த நிலையில், அம்மாபேட்டை பேரூராட்சி 2-வது வார்டுக்கு மட்டும் தேர்தல் ஒத்திவைக்கப்படுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்று (16ம் தேதி), இதே மாவட்டம் அந்தியூர் - அத்தாணி பேரூராட்சியின் 3-வது வார்டு திமுக வேட்பாளர் எம்.ஐயப்பனும், அதற்கு சில நாட்களுக்கு முன்பு விருதுநகர் வத்திராயிருப்பு பேரூராட்சி 2-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட முத்தையா என்பவரும் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

திமுக வேட்பாளர்கள் அடுத்தடுத்து உயிரிழந்து வருவது திமுகவினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News