எதிர்க்கட்சியாக செயல்படவில்லை.. அதிமுக மீது பாஜக பாய்ச்சல்..!
எதிர்க்கட்சியாக செயல்படவில்லை.. அதிமுக மீது பாஜக பாய்ச்சல்..!
அதிமுக அமைப்பு செயலாளர் பொன்னையன் சமீபத்தில், “அதிமுக பின்னுக்கு தள்ளப்படும் என்ற பிரச்சாரத்தை பாஜக மறைமுகமாக செய்கிறது.
நாம் எச்சரிக்கையோடு, விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்.முல்லைப் பெரியாறு பிரச்னை, காவிரி பிரச்னை, பாலாறு பிரச்னை போன்றவற்றில் தமிழக பாஜக குரல் எழுப்புவதில்லை.
இதை மக்களுக்கு புரிய வைக்க வேண்டும். தோழமை கட்சி என்பதால் நாம் இதைச் செய்ய வேண்டாம். சமூக வலைதளங்களில் அதை பரப்ப வேண்டும். மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனக் கூறியிருந்தார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக தமிழக பாஜக துணைத்தலைவர் வி.பி.துரைசாமி கூறியதாவது: “சட்டசபையில் பாஜகவுக்கு 4 எம்எல்ஏக்கள் உள்ளனர்.
ஏழை மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் பஞ்சமி நிலம், மின்சாரத்துறை மற்றும் கல்வித் துறையில் நடக்கும் ஊழல் குறித்து அவர்கள் தினமும் பேசி வருகின்றனர். அண்ணாமலை மக்கள் மன்றத்தில் பேசி வருகிறார்.
தமிழகத்தில் அதிமுக பிரதான எதிர்க்கட்சியாக செயல்படவில்லை. சட்டசபையில் 67 எம்எல்ஏக்களை வைத்துள்ள அதிமுக, வலுவான எதிர்க்கட்சியாக செயல்பட வில்லை.
ஆனால், 4 எம்எல்ஏக்கள் வைத்துக் கொண்டு பாஜக சிறப்பாக செயல்படுவதாக மக்கள் ஏற்று கொண்டனர். ஆளுங்கட்சியின் ஊழல்களை வெளிக்கொண்டு வர அதிமுக தவறிவிட்டது.
அதிமுக அமைப்புச் செயலாளர் பொன்னையனுக்கு ராஜ்ய சபா சீட் கிடைக்கவில்லை என்ற அதிருப்தியில் அவர் பாஜகவை இப்படி பேசியிருக்கிறார். அவர் தேவையில்லாமல் கருத்துகளை தெரிவித்திருக்கிறார்.
கூட்டணி தர்மம் என்று கூட பார்க்காமல் பாஜக குறித்து பேசிய பொன்னையனுக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். பொன்னையனிடம் அதிமுக உரிய விளக்கம் கேட்க வேண்டும்” என்று துரைசாமி கூறினார்.