புழல் சிறையில் ஜெயக்குமாரை சந்தித்த ஓபிஎஸ்.. திமுக அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு !!
புழல் சிறையில் ஜெயக்குமாரை சந்தித்த ஓபிஎஸ்.. திமுக அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு !!
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்படி, 38 மாவட்டங்களிலும் ஆட்சியர் அலுவலகம் முன்பு அதிமுகவினர், திரண்டு ஜெயக்குமார் கைதை கண்டித்தும் தமிழக அரசுக்கு எதிராகவும் கோஷம் எழுப்பி போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில், சென்னை புழல் மத்திய சிறையில் உள்ள ஜெயக்குமாரை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம் ஆகியோரும் சென்று சந்தித்தனர். சுமார் அரை மணி நேரம் ஜெயக்குமாருடன் அவர்கள் சந்தித்து பேசினர்.
பின்னர், சிறை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், தமிழகத்தில் பல்வேறு வகையில் ஆளும் அரசு துஷ்பிரயோகம் செய்து வருகிறது. தேனி மாவட்டத்தில் 11 வார்டுகளில் அதிமுக வெற்றி பெற்ற நிலையில், அவர்களை காவல் துறையினர் திமுகவில் சேர வற்புறுத்துகின்றனர்.
அதிமுகவின் 50 ஆண்டு காலத்தில் பல போராட்டங்களையும், அச்சுறுத்தல்களையும் சந்தித்து அதில் அதிமுக வெற்றி பெற்றது. எந்த வித அச்சுறுத்தல் வந்தாலும் அதனை எதிர்கொள்வோம். கள்ள ஓட்டு போட வந்தவர் மீது வழக்கு பதியாமல் அதிகாரத்தை கையில் வைத்து கொண்டு அரசு அச்சுறுத்தல் நடத்தி வருகிறது, அரசியல் ரீதியாக சந்திக்க திமுக அரசுக்க திராணி இல்லை எனவும் கூறினார்.
மேலும், ஜெயக்குமார் நலமாகவும், தெம்பாகவும் உள்ளார். எதிர்கட்சியை அழித்து விட திமுக அரசு கங்கணம் கட்டி செயல்படுவதாகவும் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டினார்.
newstm.in