ஓபிஎஸ் படம், பெயர் அழிப்பு.. விழுப்புரத்தில் பரபரப்பு..!
ஓபிஎஸ் படம், பெயர் அழிப்பு.. விழுப்புரத்தில் பரபரப்பு..!
சென்னை வானகரத்தில் நேற்று(23-ம் தேதி) பல்வேறு களேபரங்களுடன் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடந்து முடிந்தது. கூட்டத்தில், “அனைத்து தீர்மானங்களும் நிராகரிக்கப்படுகிறது” என்று, அதிமுக செயலாளரும், முன்னாள் சட்டத் துறை அமைச்சருமான சி.வி.சண்முகம் ஆவேசமாக பேசினார்.
இதைத் தொடர்ந்து பேசிய அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி, “பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட இருந்த 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டு, அடுத்த பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்படுவார்” என்று அறிவித்தார்.
இந்த உட்கட்சிப் பூசலுக்கு மத்தியில், ஓ.பன்னீர்செல்வம் பொதுக்குழு கூட்டத்தில் இருந்து வெளியேற, அவர் மீது தண்ணீர் பாட்டிலை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இப்படியாக அதிமுக பொதுக்குழு கூட்டம் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகி உள்ளது.
இந்நிலையில், விழுப்புரம் மாவட்ட அதிமுக அலுவலக சுவரில் வரையப்பட்டிருந்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் படம் மற்றும் பெயர் அழிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், நகரில் உள்ள சுவர் விளம்பரங்களிலும் ஓபிஎஸ் பெயரை அழிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
அதிமுகவுக்கு எதிராக எந்தவித நடவடிக்கையிலும் ஓ.பன்னீர்செல்வம் ஈடுபடாத நிலையில், அவருடைய படம் மற்றும் பெயரை அழிப்பது அக்கட்சியின் தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.