அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் மகன் நீக்கம்? - எடப்பாடியை டென்ஷனாக்கிய சந்திப்பு !
அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் மகன் நீக்கம்? - எடப்பாடியை டென்ஷனாக்கிய சந்திப்பு !
தமிழகத்தில் அதிமுகவுக்கு நாடாளுமன்றத்தின் மக்களவைக்கு ஒரேஒரு உறுப்பினர் தான் உள்ளார். அதாவது, கடந்த முறை நடைபெற்ற முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஒருவரை தவிர மற்ற அனைத்து வேட்பாளர்களும் மண்ணை கவ்வினர். தேனி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் மட்டும் வெற்றிபெற்றார். நாடாளுமன்றத்துக்கு முதன்முறையாக அவர் தேர்வானார்.
ஆனால், தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு ஓ.பி.ரவீந்திரநாத் செய்த அலப்பறைகள் கொஞ்சம் நஞ்சம் இல்லை என அதிமுகவினரே அதிருப்தி அடையும் நிலைக்கு அங்கு பல விஷயங்கள் நடைபெற்றன. லெட்டர் பேடில் மோடி படம் போட்டுக்கொள்வது, நாடாளுமன்றத்தில் பாஜக கொண்டு வரும் தீர்மானங்களுக்கு ஆமாம் சாமி போடுவது, அதிமுக தலைமை முடிவுக்கு எதிராக மக்களவையில் செயல்படுவது என அவரது போக்கு மாறியது.
இதனால் தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக எம்.பி என்று வலம் வந்தாலும், டெல்லியில் ஓ.பி.ரவீந்திரநாத் பா.ஜ.க எம்.பியாகவே வலம் வந்தார் என கூறும் அளவுக்கு நிலைமை உள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மகன் என்பதால் பலரும் பொறுத்துக்கொண்டனர்.
இந்நிலையில் தான் மாநில வளர்ச்சி குழு கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அனைத்து கட்சிகளின் எம்.பிக்கள் கலந்து கொண்டு கருத்துகளை முன் வைத்தனர். குறிப்பாக விசிக தலைவர் திருவமாவளவன், காங்கிரஸ் திருநாவுகரசர், ஓ.பி.ரவிந்திரநாத் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது, நீங்கள் அனைவருமே ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்காக ஆலோசனை சொல்வதற்காக வந்திருக்கிறீர்கள். இந்த ஆட்சி அமைந்தபோது நான் குறிப்பிட்டு ஒன்றை சொல்லி இருந்தேன். இது, என்னுடைய அரசு கிடையாது. நம்முடைய அரசு என சொன்னேன். நம்முடைய அரசு என்கிற பரந்த உள்ளத்தோடு, நீங்கள் எல்லாரும் இங்கே வந்து இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
நமது மாநிலத்துக்கு தேவையான நல்ல திட்டங்களை நிறைவேற்ற ஆலோசனைகளை சொல்லுங்கள். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். இதையடுத்து பல்வேறு தரப்பினரின் கருத்துக்கள் பகிரப்பட்டு கூட்டமும் முடிந்தது. இதனைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.
ஆனால், ஓபிஎஸ் மகன் ஓ.பி.ரவிந்திரநாத் திடீரென முதல்வர் அலுவலகத்துக்கு சென்று விட்டார். இதை சற்றும் எதிர்பாராத முதல்வர் ஸ்டாலின் அவரை வரவேற்றதோடு இருவரும் வெகுநேரம் தனியாக பேசினர். இதன் பின்னர், நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனையில் பல்வேறு வசதிகளை செய்து தர வேண்டும் என்றும், தேனி மக்களவை தொகுதிக்கு தேவையான கோரிக்கைகள் தொடர்பாகவும் மனு அளித்ததாக கூறப்படுகிறது.
இந்த சந்திப்பின் போது பாரதியார் கவிதை புத்தகத்தை முதல்வருக்கு எம்.பி ரவீந்திரநாத் பரிசாக அளித்தார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் மகன் முதல்வர் மு.க.ஸ்டாலினை தனியாக சந்தித்து பேசிய சம்பவம் அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதே சமயம் ஓபிஎஸ் மகன் திடீரென முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசியது அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி டென்ஷனாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதன் தொடர்ச்சியாக ஓ.பி.எஸ் மகன் ஓ.பி.ரவிந்திரநாத் கட்சியில் இருந்து நீக்கப்படலாம் என்றும், அதன் மூலம் அதிமுகவில் இறுதி யுத்தம் நடக்கலாம் என்றும் பெரிதும் பேசப்படுவதால் அதிமுகவில் அடுத்த புயல் கிளம்பியுள்ளது.
newstm.in