மீண்டும் ஒரு உயிரை பறித்தது ஆன்லைன் ரம்மி.. சென்னையில் சோகம்..!
மீண்டும் ஒரு உயிரை பறித்தது ஆன்லைன் ரம்மி.. சென்னையில் சோகம்..!
சென்னை, மணலி அறிஞர் அண்ணா முதல் தெருவை சேர்ந்தவர் நாகராஜ் (37). பெயின்டிங் காண்ட்ராக்ட் வேலை செய்து வந்த இவருக்கு வரலட்சுமி என்ற மனைவியும், இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளனர்.
நாகராஜ், கடந்த ஆறு மாத காலமாக ஆன்லைனில் ரம்மி விளையாடி வந்துள்ளார். அதில் அதிக பணத்தை இழந்து கடன் சுமையால் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இதன் காரணமாக நாகராஜ் மற்றும் அவரது மனைவி வரலட்சுமிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் நாகராஜ், தான் பயன்படுத்தி வந்த செல்போனை அடகு வைத்துள்ளார். இதனால் கோபமடைந்த மனைவி அவரிடம் சண்டை போட்டுள்ளார். அதன்பின் இரவு தூங்க சென்றுவிட்டனர்.
இன்று அதிகாலை எழுந்து பார்த்தபோது, நாகராஜ் அவரது அறையில் நைலான் கயிற்றில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்துள்ளார்.
இதனைக் கண்டு கதறிய வரலட்சுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வந்தனர். இதுகுறித்து தகவல் அறித்த நாகராஜ் அண்ணன் பாலமுருகன் கயிற்றை அறுத்து நாகராஜ் உடலை கீழே இறக்கியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக மணலி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் நாகராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த மணலி போலீசார், நாகராஜ் மனைவி வரலட்சுமியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோன்று, கடந்த 6-ம் தேதி மணலி புது நகரைச் சேர்ந்த பவானி என்ற பட்டதாரி பெண் ஆன்லைன் ரம்மி விளையாடி, அதில் 20 சவரன் நகைகள் மற்றும் 3 லட்சம் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.