3 முறைதான்.. மீறினால் லைசென்ஸ் ரத்து.. ஓட்டுநர்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை..!
3 முறைதான்.. மீறினால் லைசென்ஸ் ரத்து.. ஓட்டுநர்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை..!
மூன்று முறைக்கு மேல் போக்குவரத்து விதிகளை மீறும் டிரைவர்களின் லைசென்ஸ் ரத்து செய்யப்படும் என புதுச்சேரி போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்கா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புதுச்சேரி சட்டமன்ற வளாகத்தில் உள்ள போக்குவரத்துத்துறை அமைச்சர் அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, அமைச்சர் சந்திர பிரியங்கா தலைமை வகித்தார்.
இதில், போக்குவரத்து துறை செயலர் ஜவஹர், ஆணையர் சிவக்குமார், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நாரா சைதன்யா, போலீஸ் சூப்பிரண்டு மாறன் மற்றும் தனியார் பஸ் உரிமையாளர் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் அமைச்சர் சந்திர பிரியங்கா பேசுகையில், “தனியார் பஸ்களில் நாளை முதல் அதிக சத்தம் எழுப்பக் கூடிய ஏர் ஹாரன்கள் நீக்கப்படும். அனைத்து தனியார் பஸ்களிலும் வருகிற 31-ம் தேதிக்குள் ஜி.பி.எஸ். கருவி பொருத்த வேண்டும்.
போக்குவரத்து துறையில் இயங்கும் ஜி.பி.எஸ். கட்டுப்பாட்டு மையத்துடன் இணைத்து விதிமீறல்கள் கண்காணிக்கப்பட்டு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.
அனைத்து பஸ்களிலும் வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும். 3 முறைக்கு மேல் போக்குவரத்து விதிகளை மீறும் டிரைவர்களின் லைசென்ஸ் ரத்து செய்ய மோட்டார் வாகன சட்டத்தில் இடமுள்ளது. இது முழுவீச்சில் செயல்படுத்தப்படும்” என்றார்.