பாதி சம்பளம் மட்டுமே.. நிர்வாகம் அதிரடி.. அதிர்ச்சியில் ஆசிரியர்கள்..!
பாதி சம்பளம் மட்டுமே.. நிர்வாகம் அதிரடி.. அதிர்ச்சியில் ஆசிரியர்கள்..!
கொரோனா தொற்று பரவல் காரணமாக, கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியர்களுக்கு கடந்த 19 மாதமாக பாதி சம்பளம் மட்டும் வழங்கப்பட்டது. இடையில் பள்ளிகள் திறந்தபோது, ஒரு சில மாதம் முழு சம்பளம் வழங்கப்பட்டது.
ஆனால், மீண்டும் தொற்று பரவல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதை தொடர்ந்து பள்ளி நிர்வாகம் ஆசிரியர்களுக்கு பாதி சம்பளம் மட்டுமே வழங்கியுள்ளது. இதுகுறித்து ஆசிரியர்கள் நிர்வாகத்திடம் முறையிட்டனர்.
அப்போது, ‘இவ்வாறு விடுமுறை அளிக்கப்பட்டால் பாதி சம்பளம் மட்டுமே வழங்கப்படும்’ என நிர்வாகம் கூறியுள்ளது. தனியார் பள்ளியின் இந்த அடாவடி போக்கை கண்டித்து, தனியார் பள்ளி ஆசிரியர் சங்கத்தினர் குறிப்பிட்ட அந்த பள்ளி வளாகத்திற்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் போது அவர்கள், ‘முழு சம்பளம் வழங்க வேண்டும்; இல்லையென்றால் எங்கள் போராட்டம் தொடரும்’ எனும் கோஷங்களை எழுப்பினர். பள்ளி வளாகத்திற்குள் நடைபெற்ற போராட்டத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.