வரும் 18-ம் தேதி வரை மட்டுமே.. ஆசிரியர் தேர்வு வாரியம் முக்கிய அறிவிப்பு..!
வரும் 18-ம் தேதி வரை மட்டுமே.. ஆசிரியர் தேர்வு வாரியம் முக்கிய அறிவிப்பு..!
பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1,060 விரிவுரையாளர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 16-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் லதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “2017 - 2018-ம் ஆண்டிற்கான அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1,060 விரிவுரையாளர் காலி பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்ய ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டது.
அதனைத் தொடர்ந்து, விண்ணப்பம் செய்தவர்களுக்கு 2021 டிசம்பர் 8-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை ஆன்லைனில் தேர்வு நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் 2022 மார்ச் 8-ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
மேலும், பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பம் செய்தவர்கள் தங்கள் கல்வித் தகுதி சான்றிதழ், பணி அனுபவ சான்றிதழ் தொடர்பான கூடுதல் ஆவணங்களை 2022 மார்ச் 11-ம் தேதி முதல் ஏப்ரல் 1-ம் தேதி வரை பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டது.
விண்ணப்பித்தவர்களின் சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்கள் அடிப்படையில் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு, 15 பாடப் பிரிவுகளுக்கு ஒரு பணியிடத்திற்கு 2 பேர் என்ற விகிதாச்சாரப்படி சான்றிதழ் சரிபார்ப்பிற்கான பட்டியல் தயார் செய்யப்பட்டு, ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இதன் மீது பெறப்பட்ட ஆட்சேபனைகள் மீதும் ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
தற்போது, முதல் கட்டமாக டெக்ஸ்டைல் டெக்னாலஜி, புரொடக்ஷன் இன்ஜினீயரிங், பிரின்டிங் டெக்னாலஜி, இயற்பியல், வேதியியல், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியலில் இடம் பெற்றுள்ள வேலைக்கு விண்ணப்பம் செய்தவர்களுக்கு ஜூலை 16-ம் தேதி நேரடி சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும். மற்ற பாடங்களுக்கு 17 மற்றும்18-ம் தேதிகளில் நடத்தப்படும்.
விண்ணப்பம் செய்தவர்களுக்குச் சான்றிதழ் சரிபார்ப்பிற்கான அழைப்பு கடிதம் நேரடியாக அனுப்பப்படாது; ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் மட்டுமே வெளியிடப்படும். அழைப்பு கடிதத்தை 14-ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.