உக்ரைனில் இருந்து ஊட்டி.. வளர்ப்பு நாய்களுடன் வந்த மாணவி..!

உக்ரைனில் இருந்து ஊட்டி.. வளர்ப்பு நாய்களுடன் வந்த மாணவி..!

Update: 2022-03-11 18:23 GMT

உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர்  நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. இதனால், அங்கு சிக்கியுள்ள இந்திய மாணவர்களை ஆபரேஷன் கங்கா எனும் திட்டத்தின் மூலம் மீட்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த திட்டத்தால் பல மாணவர்கள் நாடு திரும்பி உள்ளனர். 

இந்நிலையில், நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள கேத்தி பாலாடாவை சேர்ந்த பாபு என்பவரின் மகள் ஆர்த்தி உக்ரைன் கிவ் பகுதியில் எம்.பி.பி.எஸ் 5-ம் ஆண்டு படித்து வந்துள்ளார். தற்போது இந்த போருக்கு நடுவே தனது 2 வளர்ப்பு நாய்களுடன் மாணவி ஆர்த்தி சொந்த ஊருக்கு திரும்பி உள்ளார்.

இதுகுறித்து மாணவி ஆர்த்தி கூறியதாவது: “உக்ரைனில் போர் காரணமாக சொந்த நாடு திரும்ப முடியாமல் சிக்கிக் கொண்டேன். கிவ் பகுதியில் இருந்து 10 நாட்கள் வெளியேற முடியாமல் கட்டடத்தின் அடியில் தஞ்சமடைந்தேன்.

அங்கு இந்திய மாணவர்களும் உடனிருந்தனர். அங்கிருந்து மெட்ரோ ரயில் நிலையத்திற்கு சென்றபோது தாக்குதல் நடந்ததால், மீண்டும் பழைய இடத்திற்கே வந்தோம். உணவு, தண்ணீர் இல்லாமல் கஷ்டப்பட்டேன்.

பின்னர், ரயில் மூலம் ஹங்கேரி எல்லைப் பகுதிக்கு வந்தேன். நான் கல்லூரியில் படிக்கும்போது 2 நாய்களை வாங்கி வளர்த்தேன். எனது பெற்றோர் வளர்ப்பு நாய்களை அங்கேயே விட்டு வரும்படி கூறினர். அதற்கு நான் வளர்ப்பு நாய்களுடன்தான் வருவேன் என்று தெரிவித்தேன்.

முதலில், விமானத்தில் டில்லி வருவதற்கு வளர்ப்பு நாய்கள் இருந்ததால் அனுமதி தரவில்லை. பின்னர் அதற்காக தனி கூண்டு வாங்கி, அதில் அடைத்த பின்னர் அனுமதி கிடைத்தது. டில்லியில் இருந்து ரயில் மூலம் சென்னைக்கு வந்தேன்.

சொந்த ஊருக்கு திரும்ப டிக்கெட், உணவு போன்ற உதவிகள் செய்த மத்திய - மாநில அரசுகளுக்கு நன்றி. எனது மருத்துவ படிப்பு என்ன ஆகும் என்று தெரியவில்லை. எனவே, மருத்துவப் படிப்பை முடிக்க உதவி செய்ய வேண்டும்” என அவர் தெரிவித்தார்.

Similar News