தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்த பனை விவசாய தொழிலாளர்கள்..!!

தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்த பனை விவசாய தொழிலாளர்கள்..!!

Update: 2022-04-02 04:45 GMT

சாத்தான்குளம் அருகே நடைபெற்ற இந்திய பனை விவசாய தொழிலாளர்கள் சங்க கூட்டத்தில் பனை மரத்திற்கு சொட்டு நீர்ப்பாசன வசதி உட்பட பல கோரிக்கைகள் தமிழக அரசுக்கு வைக்கப்பட்டுள்ளன.

சங்கத் தலைவர் சத்தியசீலன் தலைமை தாங்கினார். விஜயநாராயணன் வரவேற்று பேசினார். ”பதனீர் சீசன் தற்போது தொடங்கியுள்ளது, இப்பகுதியில் வெளிமாநில விஷ தேனீக்கள் வைத்து தேனீ சேர்க்கும் பணி நடந்து வருகிறது. அந்த தேனீக்கள் பனை மரத்தில் அதிகமாக காணப்படுவதால், பனை தொழிலாளர்கள் பனையேறும்போது தேனீ கொட்டி பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆதலால் அதிகாரிகள் பார்வையிட்டு பனைத்தொழிலாளர்கள் பாதிக்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. 

மேலும், “இலங்கையில் தென்னைக்கு அத்தர் அமைத்து கொடுத்தது போல் தமிழகத்தில் பனை மரத்துக்கு நவீனஅத்தர் அமைக்க அரசு சார்பில் பனை மரத்துக்கு ரூ.10 ஆயிரம் மானிய கடனுதவி வழங்கிட வேண்டும், பனை மரத்தை காப்பாற்ற சொட்டு நீர்ப்பாசனம் அமைக்க கடனுதவி வழங்க வேண்டும். சீனி கருப்பட்டிக்கு தடை விதிக்க வேண்டும்,” என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் பனை தொழிலாளர்கள் ராசையா, வருவேல், யோசேப், ராபர்ட், கிஷோர், சந்தனம் குணசேகர், லிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஜார்ஜ் நன்றி கூறினார்.

Similar News