சென்னையில் பரபரப்பு.. நோயாளியுடன் சென்ற ஆம்புலன்ஸ் திடீரென தீப்பிடித்து எரிந்தது..!
சென்னையில் பரபரப்பு.. நோயாளியுடன் சென்ற ஆம்புலன்ஸ் திடீரென தீப்பிடித்து எரிந்தது..!
சென்னை கீழ்ப்பாக்கம் லாக் தெருவைச் சேர்ந்தவர் நடராஜன் (78). இவர், முடக்க நோய் சிகிச்சைக்காக ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக செல்ல வேண்டி இருந்தது.
இதற்காக, தனியார் ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்றை நேற்றிரவு வரவழைத்தனர். நடராஜனை அவரது மனைவி, மருமகன் சதீஷ் ஆகியோர் ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் சென்றனர். கீழ்ப்பாக்கம் நியூ ஆவடி சாலையில் வந்தபோது, ஆம்புலன்ஸ் முன் பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறியது.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ராபின், உள்ளே இருந்த நடராஜன், அவரது மனைவி, மருமகன் ஆகியோரை கீழே இறங்கச் சொல்லி விட்டு தீயணைப்புத்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்.
வில்லிவாக்கம், கீழ்ப்பாக்கம் தீயணைப்பு நிலையங்களில் இருந்து விரைந்து வந்தனர். ஆனால், அதற்குள் ஆம்புலன்ஸ் முழுவதும் எரிந்தது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
தகவல் அறிந்து கீழ்ப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தீ விபத்துக்கான காரணம் குறித்து ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ராபினிடம் விசாரணை நடத்தினர்.
இதையடுத்து போலீசார், நோயாளி நடராஜன் மற்றும் அவரது மனைவி, மருமகன் சதீஷ் ஆகியோரை ஆட்டோ மூலம் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
நோயாளியுடன் சென்ற ஆம்புலன்ஸ் திடீரென நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.