மக்களே, குடையோடு போங்க.. கொட்டப்போகுது கனமழை..!
மக்களே, குடையோடு போங்க.. கொட்டப்போகுது கனமழை..!
நீலகிரி, கோவை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் செந்தாமரை கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
“வட உள் தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, இன்று (19-ம் தேதி) தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், நாமக்கல், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக விரிஞ்சிபுரம் (வேலூர்) 15 செ.மீ., சங்கரிதுர்க் (சேலம்) 13 செ.மீ., ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை) 10 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
இன்று தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு, மாலத்தீவு, கர்நாடகா - கேரளா கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக் கடல் பகுதி, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், தென் கிழக்கு வங்கக்கடல், அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் தென் தமிழக கடலோர பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்திலும் இடையிடையே 60 கி.மீ வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும்.
மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப் படுகிறார்கள்” என்று அதில் கூறியுள்ளார்.