மக்கள் வன்முறையை கைவிட வேண்டும்.. இலங்கை அதிபர் வேண்டுகோள் !!

மக்கள் வன்முறையை கைவிட வேண்டும்.. இலங்கை அதிபர் வேண்டுகோள் !!

Update: 2022-05-10 19:26 GMT

மக்கள் வன்முறையை கைவிட வேண்டுமென இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்சே வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் தற்போது எவரும் எதிர்பார்த்திராத வகையில் வன்முறை ஏற்பட்டு வருகிறது. அரசு உயரதிகாரிகள், ஆளும் கட்சி பிரதிநிதிகள் அனைவரும் தலைமறைவாகி வருகின்றனர். தொடக்கத்தில் மக்களின் போராட்டம் அமைதியாக தான் நடைபெற்றது.

பிரதமா் மகிந்த ராஜபக்சே நேற்று தனது பதவியை ராஜிநாமா செய்தாா். இதற்கிடையே, தலைநகா் கொழும்பில் பிரதமரின் இல்லம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவா்கள் மீது மகிந்த ராஜபட்சேவின் ஆதரவாளா்கள் திடீா் தாக்குதலில் ஈடுபட்டனா். போராட்டம் நடத்தியவர்கள் மீது ராஜபட்சே ஆதரவாளர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்தினர். அமைதியாக போராட்டம் நடத்திய மக்கள் ஏராளமானோர் படுகாயமடைந்தனர். 

இதனைத் தொடர்ந்தே, அமைதியாக நடைபெற்று வந்த போராட்டம் வன்முறையாக மாறியது. ஆத்திரமடைந்த மக்கள், பிரதமரின் இல்லத்திற்கு தீ வைத்தனர். மக்கள் மீது ஆளுங்கட்சியினரும், ஆளுங்கட்சியினர் மீது மக்களும் மாறிமாறித் தாக்குதல் நடத்தி வருவதால் இலங்கையில் அசாதாரண சூழல் நிலவி வருகின்றது.

இந்நிலையில், இலங்கை அதிபர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், 

இலங்கை மக்கள் அனைவரும் வன்முறையை கைவிட்டு அமைதி காக்க வேண்டும். எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்தவேண்டும்.

அரசியல் அமைப்பு சட்டப்படி, ஒருமித்த கருத்தின் மூலம் அரசியல் நிலைத்தன்மை ஏற்படுத்தி பொருளாதாரம் நெருக்கடியை சீர்செய்ய உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தைவிட்டு வெளியேறியுள்ள மகிந்த ராஜபட்ச, கடற்படை தளத்தில் தஞ்சமடைந்துள்ளதாக தகவல் வெளியானதை தொடர்ந்து, போராட்டக்காரர்கள் கடற்படை முகாம் முன்பு திரண்டுள்ளனர்.

 
newstm.in
 
 

Tags:    

Similar News